“குடோக் கொடுக்கவில்லை எனில், எங்களின் பல வாடிக்கையாளர்கள் எங்களின் ஹோட்டலுக்கு வர மாட்டார்கள்,” என்கிறார் சந்தன் சிக்மா. கடந்த எட்டு வருடங்களாக 37 வயது சந்தன் மற்றும் 36 வயது ஷமாரு ஆகியோர் அந்த ஹோட்டலில் குடோக் அளித்து வருகிறார்கள். மீன் மற்றும் காய்கறி கொண்டு செய்யப்படும் உணவான குடோக், திரிபுராவின் உனாகோடி மாவட்டத்திலுள்ள சக்மா சமூகத்தின் பாரம்பரிய உணவு ஆகும்.
சாந்தி நகர் கிராமத்தில் ஜெசிகா ஹோட்டலை நடத்தி வரும் தம்பதியர் மணம் முடித்து 20 வருடங்கள் ஆகிறது. ஜெசிகா, செவோன் என இரு மகள்கள். முன்னவர் 12ம் வகுப்பும், பின்னவர் 8ம் வகுப்பும் படிக்கின்றனர்.
“எங்களின் அடையாளத்தில் குடோக்தான் மையம்,” என்கிறார் சந்தன். கணக்கெடுப்பில் 80,000 பேராக இருக்கும் சக்மா சமூககத்தினர் திரிபுராவில் பட்டியல் பழங்குடியாக வகைபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
வருடம் முழுக்க குடோக் விருப்பத்துக்குரிய உணவாக ஹோட்டலில் இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். மூன்றரை கட்டுமானமான அந்த ஹோட்டலில் 40 பேர் வரை ஒரு நேரத்தில் சாப்பிடலாம். 100-லிருந்து 160 ரூபாய் வரை உணவுகள் கொடுக்கப்படுகிறது. பாரம்பரிய குடோக்தான் இந்த உணவுகளில் பிரபலமான உணவு.
“வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் தனியாக குடோக்கை விற்கும்படி மக்கள் அடிக்கடி சொல்வதுண்டு,” என்கிறார் வீட்டிலும் அதை சமைக்கும் சந்தன். “இங்கு வாழும் எல்லா சமூத்தினருக்கும் பிடித்த உணவு அது,” என்கிறார் அவர். ஹலாம், மோக், டெப்பார்மா மற்றும் வங்கதேசத்திலிருந்து பல பத்தாண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனப் பல சமூகத்தினர் அங்கு வசிக்கிறார்கள்.
குடோக் உணவு, காய்கறி மற்றும் மீன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட மீனுக்கான உள்ளூர் பெயர் பெர்மா அல்லது ஷிடோல். புண்டி மற்றும் பாய்ஸ்ஸா ஆகிய வகையினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. “பாய்ஸ்ஸா ஷிடோலை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஏனெனில் அதற்கென தனித்துவ மணம் உண்டு,” என்கிறார் சந்தன். உள்ளூர் சந்தையிலிருந்து கிலோ 500 ரூபாய்க்கு ஷிடோலை அவர் வாங்குகிறார்.










