கடந்த ஏழு வருடங்களாக புகைப்படங்கள் வழியாக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வியலையும், பிரச்சினைகளையும் ஆவணப்படுத்தி வருகிறேன். இத்தனை வருடங்களில் அவர்கள் முறையான முகக்கவசம் மற்றும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதை நான் பார்த்ததில்லை. தவிர அவர்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து உபகரணங்களையும் அவர்களே தயார் செய்கிறார்கள்.
இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்த போதிலும் இன்னும் பாதாள சாக்கடைகளில் மனிதர்களையே இறக்கி வேலை செய்ய வைப்பதோடு இல்லாமல் அந்த வேலை செய்யும் போது மக்கள் இறந்து போகிற சூழலும் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்தாலும் சாதிய மனநிலை அப்படியே இந்த சமூகத்தில் உறைந்தே இருக்கிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது.
கோவிட் போன்ற தொற்று நோய் காலகட்டங்களிலும் இயற்கை சீற்றங்களின் போதும் மட்டுமே தூய்மைப் பணியாளர்களை இந்த பொது சமூகம் முன்கள பணியாளர்களாக நினைவுக் கூரும். மற்ற நேரங்களில் அவர்கள் குப்பை அள்ளுபவர்களாகவே இருப்பார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியின் தலைமையிடமான சென்னை ரிப்பன் மாளிகையின் வெளியே இருந்து கொண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து 13வது தேதி வரை, தூய்மைப் பணி தனியார்மயம் ஆக்கப்பட்டதற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தார்கள். போராட்டத்தின் 13 வது நாள் தமிழ்நாடு அரசு அவர்களை பலவந்தமாக காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தியது.
மண்டலம் 5 (ராயபுரம்) மற்றும் மண்டலம் 6 (திரு.வி.க. நகர்) ஆகிய மண்டலங்களை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், அம்மண்டலங்களின் திடக் கழிவு மேலாண்மையை தனியார் ஒப்பந்ததாரர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் போராடி வந்தார்கள்.
இந்தப் பணியாளர்களுக்கு தனியார் மயம் என்பது வெறும் கூலிக்கான பிரச்சினை மட்டுமல்ல, மாண்பும் வாழ்வாதாரத்துக்குமான பிரச்சினையும் கூட. இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித் பெண்கள். மாநகராட்சியின் நேரடி வேலைவாய்ப்பை இழப்பதென்பது இவர்களுக்கு இப்போதிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் நிரந்தரப் பணி என்பதற்கான வாய்ப்பை இழப்பதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது. அவர்களுடைய எதிர்ப்பு, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் என்பதோடு திறன் என்கிற பெயரில் கண்ணுக்கு புலப்படாத அவர்களுடைய பணியை மேலும் குறைத்து மதிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ளாததும் கூட.


























