விஷால் இன்று உயிரோடு இருந்திருந்தால், என்ன செய்திருப்பான்? பதின்மவயதினன். தன் நண்பர்களுடன் பட்டம் விடுவான். அல்லது விளையாடுவான். குடும்பத்தின் இரண்டு ஏக்கர் நிலத்தில் தன் தந்தையுடன் வேலை செய்துகொண்டிருப்பான் அல்லது அவ்வப்போது செய்கிற ஏதாவது தினக்கூலி வேலைக்குப் போயிருப்பான். புதிய உடைகளுக்கு ஆசைப்பட்டான் என்று அவனது பெற்றோர்கள் நினைவுகூர்கிறார்கள். அதைத்தான் அவன் கேட்டான்.
ஆனால், அதற்குச் சில நாள்களுக்கு முன்பு, பயிர்களில் தெளிப்பதற்காக அவனுடைய அப்பா வாங்கி வைத்திருந்த ஒரு பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து, கடந்த நவம்பர் மாதம், தீபாவளி முடிந்த பத்தாம் நாள் இறந்துவிட்டான். அன்று கசங்கிய வெள்ளைச் சட்டையும் நீலநிற பேண்ட்டும் அணிந்திருந்தானென்று போலிஸ் அறிக்கை கூறுகிறது. அவனுக்கு பதினாறு வயது கூட ஆகியிருக்கவில்லை.
அவர்கள் குடியிருக்கும் இரண்டு அறைகள் கொண்ட குடிசையில், ஜன்னலுக்குக் கீழேயிருந்த இடத்தைக் காட்டி, “அவன் இங்கேதான் மயங்கி விழுந்தான்,” என்று அவனுடைய அப்பா விஸ்வநாத் குலே சொன்னார். “அவனுடைய அம்மா, பக்கத்திலிருந்த அடுக்களையில் சப்பாத்தி செய்துகொண்டிருந்தார். நான் அங்கே இருந்தேன்,” என்று வாசல் முற்றத்தின் பக்கம் கைகாட்டிச் சொன்னார். மகன் பொத்தென கீழே விழுந்தது கேட்டு ஷீலா குலே ஓடிச் சென்று பார்த்த போது விஷால் தரையில் கிடந்தான். “ஒரு வெள்ளைத் திரவம் அவனுடைய வாயிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது.” காலியான பூச்சிமருந்து டப்பா அவனருகில் கிடந்தது. மருத்துவமனைக்குச் செல்லும் முன்னமே விஷால் இறந்துவிட்டான்.
“இதுதான் எங்கள் வாழ்வின் மிக இருண்ட காலம்,” என்றார் விஸ்வநாத்.
ஆயிரத்து ஐநூறு பேர் வசிக்கிற, இந்தப் பகுதியிலேயே மிக வறுமை நிலவுகிற கிராமம், தாதம். அது மஹாராஷ்டிராவில் பருத்தியும், சோயாபீன்ஸும் விளைகிற மேற்கு விதர்பாவின் அகோலா என்ற பெரிய நகரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 1990-களிலிருந்து விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக அப்பகுதி செய்திகளில் வருகிறது. தொடர்ந்து பல வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத் தொழிலின் நெருக்கடி, மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.
மஹாராஷ்டிராவின் கிழக்கு, மத்தியப் பகுதிகளான விதர்பாவிலும் மரத்வாடாவிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் செய்திகளாகி, அரசு அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதனுடன் தொடர்புள்ள இன்னொரு துயரம் கவனம்பெறத் தவறிவிட்டது: கடன் சுமையால் வாடும் விவசாயிகளின் குழந்தைகளின் தற்கொலைகள். (விவசாயிகளின் குழந்தைகள், கடந்த காலத்திலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதுண்டு. ஆனால் இந்தச் சம்பவங்கள் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன என்பதை செய்தி அறிக்கைகள் சுட்டுகின்றன.)
விவசாயத் தொழிலின் நெருக்கடிகள் விளைவாக இந்தியாவில் நிகழும் குழந்தைகளின் தற்கொலைகள் (18 வயதுக்குக் கீழ்; அல்லது 20 வயதுக்குக் கீழ்) பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், பல ஆய்வுகளும் அறிக்கைகளும் – 2005-ல் மஹாராஷ்டிரா அரசு வீடு வீடாகச் சென்று நடத்திய ஆய்வு முதல், அதற்குப் பின்னால் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ், இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மெண்ட் போன்ற நிறுவனங்கள், விவசாயத் தொழிலில் நெருக்கடிகள், தற்கொலைகள் குறித்து நிகழ்த்திய ஆய்வுகளும் - விவசாயக் குடும்பங்களில் குழந்தைகள் மீது கடனும் அதனால் எழும் துயரும் ஏற்படுத்தும் தாக்கங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றன. பதின்ம வயதுக் குழந்தைகள் பலர் பெற்றோர்களின் கடன்சுமையைச் சுவீகரிக்கின்றனர். பெரியவர்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கின்றனர். பள்ளிசெல்வதை நிறுத்திவிடுகின்றனர். உழவுத் தொழில் செய்கின்றனர், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். குடும்பத்தில் உணவைப் பகிர ஒரு வயிறு குறையுமென்று, பெண் குழந்தைகளை விரைவில் திருமணம் செய்து அனுப்பி விடுகின்றனர்.





