காற்றில் மண் மற்றும் விறகு மணம் நிரம்பியிருக்கிறது. சிமெண்ட் தரையில், வெள்ளை மண்ணின் திட்டுகள் இருக்கின்றன. வார்ப்புகளும் பாதி முடிக்கப்பட்ட பானை பொருட்களும் சுற்றி கிடக்கின்றன. நடப்பதற்கு இடம் இல்லை. “பார்த்து வாருங்கள்,” என தொடர்ந்து ஹமீது அகமது சொல்லிக் கொண்டிருக்கிறார்.
12 வயது சிறுவன், சுற்றும் சக்கரத்தின் வேகத்தை கற்றுக் கொண்டிருக்கிறான். அவன், ஹமீதின் மகன் சல்மான். வெள்ளை மண் தூசு படிந்திருக்கும் அவன் வலது காலால் சக்கரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறான். இடது காலை நீட்டி கவனத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறான்.
“மெல்ல (பானையை) பிரித்து எடு,” என ஹமீது சொல்கிறார். வரலாறு மீளுகிறது. தற்போது 49 வயதாகும் அவர், இந்த வேலையை ஒன்பது வயதில் தந்தையிடமிருந்து கற்றார். “முதலில் சில பானைகள் உடைந்தது,” என நினைவுகூருகிறார் புன்னகையுடன். “பயிற்சியில்தான் வேலை கற்றுக் கொள்ள முடியும்.”
10 சகோதரர்களில் ஒருவரான அவர், ஏழாம் தலைமுறை கைவினைஞர் ஆவார். ‘பீங்கான்’ நகரம் என அழைக்கப்படும் உத்தரப்பிரதேச குர்ஜாவில் இந்த பாணியை பின்பற்றும் ஒரே குடும்பம், அவரின் குடும்பம்தான். இஸ்லாமியர்களால் அதிகம் செய்யப்படும் பானைகளுக்கு பெயர் பெற்ற நகரம் அது.



















