திர்ரா கலைஞரான எம்.கே.கெலுகுட்டி, ஒருமுறை புனிதத்தோப்பில் நடந்த நிகழ்ச்சியின்போது ஓர் இலையை மரத்திலிருந்து பறித்துவிட்டார். “இடத்தை ‘அசுத்தப்படுத்தி’ விட்டதாக சொல்லி நான்கு அணா தண்டம் கட்ட சொன்னார்கள். அவர் அச்சமயத்தில் கடவுளாக நடித்திருந்தது கூட அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை,” என நினைவுகூருகிறார் அவரது பேரனான எம்.கே.குஞ்சிராமன்.
பட்டியல் சாதியினரான திர்ரா கலைஞர்கள், நிகழ்ச்சிகளுக்காக உயர்சாதி கோவில்களில் வரவேற்கப்பட்டாலும் சாதாரண பொழுதுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. காவு அல்லது புனிதத் தோப்புகளிலும் கோவில் வளாகத்திலும் இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால் தெய்வம் இருக்கும் இடத்துக்குள் நுழைவதோ நிகழ்ச்சி நடத்துவதோ தடுக்கப்பட்டிருக்கிறது.
குஞ்சிராமன், உயர்சாதியினரின் துணிகளை துவைக்கும் வண்ணான் சமூகத்தை சேர்ந்தவர். கேரளாவில் அவர்கள் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். திர்ரா கலைஞர்களான அப்பா, தாத்தா ஆகியோருடன் பால்யவயதில் இருந்தே அவர் செல்லத் தொடங்கிவிட்டார். நாற்பது வயதுகளின் தொடக்கத்தில் அவரே நடிக்கத் தொடங்கினார்.
“தலச்சிலோன், கரியாதன், குட்டிச்சாத்தான், வெட்டகொருமகன், கன்னிகாகருவோன்…” என 87 வயது நிறைந்த அவர், தான் நடித்த தெய்வங்களின் பெயர்களை பட்டியலிடுகிறார்.
பிறகு குஞ்சிராமன் ‘அஞ்சாடி’யும் ‘தோட்டம் பாட்டு’ம் பாட ஆரம்பிக்கிறார். முதல் பாடலில் தெய்வம், ஆடுபவரின் உடலுக்குள் புகும். இரண்டாவது பாடல், குட்டிசாத்தனின் கதையை சொல்லும். ஆனால் சில அறிஞர்கள் தோட்டம் பாட்டு, குட்டிச்சாத்தானை உடலுக்குள் புகுத்தாது என்கின்றனர். பாதுகாப்புக்கும் செல்வத்துக்கும் வழிபடப்படுகிற பகவதியைதான் உடலுக்குள் செலுத்தும் என்கின்றனர். நெஞ்சில் எட்டு புள்ளிகளை கொண்டு தெய்வம் சித்தரிக்கப்படுகிறது.
அவரது பாடல் அந்த பகுதியை நிறைக்கிறது. ‘குட்டிச்சாத்தான் வள்ளுவ (கீழ்) சாதி தாய்க்கும் நம்பூதிரி (பிராமண) தந்தைக்கும் பிறந்தவன். சிறுவனாக இருந்தபோது, பெரும் பசியில் இருந்தான். ரொம்ப காலமாக பட்டினியில் இருந்தான். பிறகு அவன் தன் மந்தையில் இருந்த மாட்டை கொன்று, ரத்தம் குடித்தான். கோபத்தில் அவனது தந்தை, அவனை கொன்று 399 துண்டுகளாக வெட்டினார்,” என விவரிக்கிறார் குஞ்சிராமன்.
கோழிக்கோட்டிலுள்ள சிவபுரம் கிராமத்தின் இரண்டு மாடி வீட்டு வராண்டாவில் அவர் அமர்ந்திருக்கிறார். “அப்படித்தான் இன்று நம்மிடம் பூக்குட்டி, தீக்குட்டி, கரிக்குட்டி என பல குட்டிச்சாத்தான்கள் இருக்கின்றனர்,” என்கிறார் அவர்.


























