என் மக்களின் மரணங்களை பற்றி எழுத நினைத்த ஒவ்வொரு முறையும் என் மனநிலை சீராக இருந்ததில்லை, அது உயிரற்ற உடலாகவே இருக்கும்.
நம்ம எவ்ளோ வளர்ச்சி அடைந்தாலும் ஒரு மனித உயிரை காப்பாற்ற எந்த ஒரு செயலும் செய்வதில்லை. மத்திய அரசு இதுவரை மலக்குழி மரணங்கள் நிகழவே இல்லனு சொல்லுது. ஆனால் இந்த வருஷம் மக்களவையில் கேட்ட ஒரு கேள்விக்கு சமூக நீதிக்கான அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, 2019-2023ல 377 பேருக்கு மேல இறந்திருக்கறதா பதில் சொல்லி இருக்கார்.
கடந்த ஏழு வருடங்களில் நான் சந்தித்த மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை பல. கடந்த 2022 வருடம் முதல் இன்று வரை சென்னை ஆவடியில் மட்டும் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 11 அன்று ஆவடியில் ஹரி என்ற நகராட்சி ஒப்பந்த ஊழியர் பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த போது கால்வாயில் விழுந்து இறந்துள்ளார். இவர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னிரெண்டு நாட்கள் கழித்து, ஹரி அண்ணா மலக்குழியில் கொல்லப்பட்ட செய்தியை சேகரிக்க சென்றேன். ஹரி அண்ணாவின் உடல் ஐஸ் பெட்டியில் பூட்டப்பட்டிருந்தது. அந்த தருணம் தமிழ் செல்வி அக்காவிற்கான சடங்குகள் நடைபெற்றது. மஞ்சள் பூசி, தண்ணீர் ஊற்றி, தாலி அறுக்கும் வரை சடங்கு முழுவதும் அவர் எந்த அசைவும் இன்றி இறுக்கமாகவே இருந்தார். அந்த ஈரப் புடவையில் கூட அவர் சிறிதும் நடுங்கவில்லை.




















