சங்க்கி பெண்கள் தயாரிக்கும் மண் பானைகள் ஒரு காலத்தில் உள்ளூர் போர்களில் ராஜதந்திர பங்கு வகித்தன. உணவு சமைக்க இப்பகுதியில் பயன்படும் இப்பானைகள் உணவளிப்பதால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்த எவரும் விரும்பியதில்லை. நெருப்பும் பிற பேரிடரும் கிராமத்தை அழித்து தரைமட்டமாக்கினாலும், சங்க்கி பானைகளில் சேமிக்கப்படும் தானியம் உணவுக்கு உதவியாக இருக்கும். சங்க்கி பானைகளின் உழைப்பும் முக்கியத்துவமும் இதுதான் என ஆவோ பழங்குடியினர் பெருமையுடன் சொல்கின்றனர்.
நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பானைகள் பாரம்பரிய முறையில் கைகளை கொண்டுதான் செய்யப்படுகின்றன. “சக்கரங்களோ கருவிகளோ நாங்கள் பயன்படுத்துவதில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை கையால்தான் இது செய்யப்படுகிறது,” என்கிறார் தியாமோங்லா லாங்சாரி. இந்த உயரத்தில் மொகோக்சுங் பகுதியில் இருக்கும் நிலங்கள், மலைகள், காடுகள் மற்றும் ஆற்றங்கரைகளிலிருந்து எடுக்கப்படும் மண்ணில்தான் பானைகள் செய்யப்படுகின்றன.
”இந்த பானைகள் எங்களின் தாய்களும் பாட்டிகளும் செய்த அதே முறையில்தான் செய்யப்படுகிறது,” எனக் கூறுகிறார் 55 வயது தியாமொங்லா. “நாகாலாந்து கிராமத்தில் இருக்கும் கடைசி குயவர்களில் ஒருவரான அவர், தாயுடன் வசித்து வரும் வீட்டில் பானைகளை செய்கிறார். கடந்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள், வீட்டு பயன்பாட்டுக்கும் விற்பனைக்குமான பானைகளை செய்வார்கள். ஆனால் இன்று நாகாலாந்தி சங்க்கி கிராமத்தில் வெறும் 15 பெண்கள்தான் வீட்டில் பானை செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
நாகாலாந்தில் ஒரு காலத்தில் பெண்களின் வழக்கமாக இருந்த பாரம்பரியத்தை செய்யவும் அடுத்தவருக்கு கடத்தவும் ஒன்றிணைந்திருப்பதற்கு சந்தோஷப்படுவதாக பெண்கள் கூறுகின்றனர். கூடுதலாக அவர்கள் ஈட்டும் வருமானம், குழந்தையின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவியாக இருக்கிறது.








