2012ம் ஆண்டில் நடந்த திருமணத்துக்கு பிறகுதான், அஞ்சு ராணியின் துயரம் தொடங்கியது. “என் கணவர் மதுவுக்கு அடிமை. தினமும் வாக்குவாதம் ஆகும். எனக்குள் நான் உடைந்து கொண்டிருந்தேன்,” என்கிறார் இரு குழந்தைகளின் தாயான அவர். அவரின் வயது 34.
குடும்பச் செலவுக்கென அவரின் கணவர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. “எங்களின் மின்சார கட்டணம் பெரும்பாலும் கட்டப்படாமல்தான் இருக்கும்,” என்கிறார் அவர். “கடன்கள் அதிகரித்து, கடன்காரர்கள் தொடர்ந்து வீட்டுக்கு வந்து எங்களை அசிங்கப்படுத்துவார்கள். அந்த நாட்களை நான் அச்சத்தில் கழித்தேன்.”
மேற்கு உத்தரப்பிரதேச டவுன் சியானாவிலுள்ள மணவீட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆயத் நகர் கிராமத்திலுள்ள பெற்றோரின் வீட்டுக்கு ஒவ்வொருமுறை அவர் செல்லும்போதும் உறவினர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும், திருமணம் அவருக்கு இழைத்திருக்கும் சிக்கல்களை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. கணவன் வீட்டுக்கு திரும்பும்படி அவரை அவர்கள் வலியுறுத்துவார்கள். அவரும் மகளும் வேறு வழியின்றி கணவன் வீட்டுக்கு திரும்புவார்கள்.
அஞ்சுவின் தந்தை 15 வருடங்களுக்கு முன் புற்றுநோய் வந்து இறந்ததிலிருந்து அவர் தனியாகதான் வாழ்கிறார். “ஒருநாள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பெற்றோர் வீட்டுக்கு நான் சென்றுவிட்டேன். அவர் எனக்காக வரவே இல்லை. நானும் திரும்பி செல்லவில்லை,” என்கிறார் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தாய்க்கருகே அமர்ந்திருக்கும் அஞ்சு.
அவர் விவசாய தினக்கூலியாக வேலை பார்க்கத் தொடங்கினார். வேலை கிடைத்தால், நாளொன்றுக்கு 200-லிருந்து 250 ரூபாய் வரை வருமானம் ஈட்டினார்.
2017ம் ஆண்டில் மறுமணம் செய்ய முயற்சித்ததில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. “என் வாழ்க்கையை மீண்டும் வாழ முயற்சித்தேன். ஆனால் இரண்டாம் மண வாழ்க்கை இன்னும் மோசமாக இருந்தது. அந்த கணவர் குடித்துவிட்டு, என்னை அடித்தார். வீட்டு பொருட்களை விற்று மது குடித்தார். உணவு தானியங்கள், குளிர்சாதனம், பிறகு என் தையல் மெஷினை கூட விற்று குடித்தார். பிறகு அவர் பிறர் வீடுகளிலிருந்து திருட தொடங்கினார். நான் அவமானப்பட்டேன்.”









