“ஊரடங்கின்போது நாங்கள் விசாகப்பட்டினத்திலிருக்கும் வீட்டுக்கு செல்ல 12 நாட்கள் தொடர்ச்சியாக நடந்தோம், என்கிறார் 45 வயது கயில் புயான், 2020ம் ஆண்டு கோவிட் தொற்றின் கொடுமையான அனுபவத்தை விவரித்து. அப்போது அவர் அகனம்புடியின் L&T கட்டுமானத்தில் தினக்கூலியாக வேலை பார்த்தார்.
கிட்டத்தட்ட 80 பேர் இருந்தனர். 10 பெண்களும் நான்கு குழந்தைகளும் அவர்களில் அடக்கம். ஜார்க்கண்டை நோக்கி 1,000 கிலோமீட்டர் பயணித்தனர். “இரவுபகலாக நாங்கள் நடந்தோம். களைப்படைந்ததும் ஒரு மணி நேரம் தூங்கி விட்டு, பிறகு மீண்டும் நடந்தோம்.” ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தின் ரப்தா கிராமத்தை நோக்கி நடந்தனர்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து, கயில் அதே போன்றவொரு பயணத்தை தலைநகர் பகுதியிலிருந்து ரயிலில் தொடங்கினார். மீண்டும் அச்சுறுத்தும் யதார்த்தத்தை நோக்கி செல்கிறார்.
கட்ட முடியாத கடன் அவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் ஏற்படுத்தியிருக்கும் எரிவாயு சிலிண்டர் நெருக்கடி, ஜார்க்கண்டின் புலம்பெயர் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்தில், “இன்னொரு ஊரடங்கு வருகிறது என அனைவரும் கூறினர்,” என நினைவுகூருகிறார். நொய்டாவின் L&T கட்டுமான தளத்தில் தினக்கூலி 500 ரூபாய்க்கு அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
எரிவாயு விலை கிலோவுக்கு 90 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்ந்தது. “மிஞ்சிய பொருட்கள், பலகை போன்றவற்றை எரித்து சமைக்கிறோம்,” என்கிறார் அவர். “எப்படியோ சமாளித்தோம்.” வெறும் 10 நாட்களுக்கு மட்டும்தான்.








