“இளசுகள் எல்லாம் உடல்நலம் பாதித்து மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். நான் எடுத்துக் கொள்ள மாட்டேன், நான் தொடர்ந்து நடப்பேன்,” என்கிறார் காம்லி பெருமையுடன்.
2018, மார்ச் மாதம் நாசிக் முதல் மும்பை வரையிலான 180 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நீண்ட நடை பேரணியில் பங்கேற்ற 40,000 விவசாயிகளில் வார்லி பழங்குடியைச் சேர்ந்த காம்லியும் ஒருவர். அவரைப் போன்ற அமைதியான ஆனால் போர்க் குணம் மிக்க விவசாயிகளின் மீள்தன்மையால் மாநில அரசு அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இரண்டு மாதங்கள் கழித்து மே 3ஆம் தேதி காம்லி மீண்டும் போராட தெருவிற்கு வந்தார். இம்முறை அவர் நிர்தார் (தீர்மான) பேரணிக்காக தஹானுவிற்கு வந்துள்ளார். மார்ச் பேரணியைப் போன்று இதற்கும் அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) அழைப்பு விடுத்தது, அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன். இப்பேரணியில் 35,000 பழங்குடியின விவசாயிகள் பங்கேற்றனர். சுட்டெரிக்கும் மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் காம்லி பேரணியில் நடந்தார். விவசாய சங்க தலைவர்கள் நீண்ட பேரணியில் கிடைத்த வெற்றியையும், தொடர் போராட்டங்களை எப்படி திட்டமிடுகிறார்கள் என்பதையும் விளக்குவதை அவர் உன்னிப்பாக கவனித்தார்.
காம்லி பாபு பஹோடா ஒரு மூத்த புரட்சியாளர். அவர் தானே – பல்கார் மாவட்டங்களின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA), உறுப்பினர். பல்காரின் தஹானு தாலுக்காவில் உள்ள சரோட்டி நகா அருகே அவல்வேடா எனும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அவர் பல தசாப்தங்களாக தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். புதுடெல்லியில் விவசாயிகள் சங்கம் சார்பில் நிகழ்ந்த இருவேறு மாபெரும் போராட்டங்களில் [2012 மற்றும் 2015] பங்கேற்றவர்.



