புலிகள் விளைநிலங்களுக்கு வருவது எங்கள் கொர்கு சமூகத்தில் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அவற்றின் கால்தடம் பதிவது அந்த நிலத்தின் விவசாயியை செல்வந்தராக்கும். எங்கும் வளமை பெருகும்.
என் பெயர் ராம்லால். நான் மகாராஷ்டிராவில் மெல்காட் புலிகள் சரணாலயத்தின் (எம்.டி.ஆர்.) இடைப்பட்ட பகுதியில் உள்ள பெவிஹிர் கிராமத்தில் பிறந்தேன். நான் வசந்த், எம்டிஆரின் முக்கியப் பகுதியில் இருக்கும் போராதியாகெடா கிராமத்தில் வசிக்கிறேன். நாங்கள் கொர்கு பழங்குடியைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பங்கள் பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வருகின்றன.
பசுக்கள், எருதுகளின் சாணங்களின் மீது புலிகளின் நகம் பதிந்து இருந்தால், நல்ல சகுனம் என்று சொல்லக் கேட்டு நாங்கள் வளர்ந்தோம். அச்சு பதிந்த சாணத்தை பத்தாயங்களில் வைத்து பாதுகாப்பதால், அந்த வீட்டில் உணவுத் தட்டுப்பாடு வராது என்பது நம்பிக்கை.
நாங்கள் மக்காச்சோளம், சோளம், நெல், கோதுமை, தினை, சோயாபீன்ஸ், நிலக்கடலை, சூரியகாந்தி, எள், துவரம்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பிற பருப்பு வகைகளை பயிரிடுகிறோம். அவற்றில் பெரும் பங்கை நாங்கள் எடுத்துக் கொண்டு எஞ்சிய சிறு பகுதியை மட்டும் விற்கிறோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரிடம் வனப்பகுதியில் பயிரிடுவதற்கான தனிப்பட்ட வனஉரிமை உள்ளது. நாங்கள் மழையை நம்பி வாழ்கிறோம். அருகமையில் உள்ள நீரோடைகள், கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பாசனத்திற்கு பயன்படுத்துகிறோம்.
















