“ராயல் பெங்கால் புலி, கிராமத்திற்குள் நுழைந்தால் ஒரே கூச்சல் குழப்பம் தான்” என்று தொடங்குகிறார், லுட்ஃபோர் மொல்லா.
கிராமத்திற்குள் புலி வந்த செய்தி பரவியதும், லுட்ஃபோர், தனது குழுவுடன் அதை விரட்ட களத்தில் இறங்குகிறார். கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளாக, சுந்தரவனக் காடுகளின் குல்தாலி தொகுதியின் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், மாநில வனத்துறை அமைத்த இரண்டு 'விரைவு செயலாற்றும் குழுக்கள்' ஒன்றின் பொறுப்பாளராக லுட்ஃபோர் செயலாற்றுகிறார்.
புலியைத் விரட்டும் இந்த குழுத் தலைவரைப் பற்றி அறிந்ததும், மைபிட் கடலோர காவல் நிலையத்தின் கீழ் உள்ள அவரது கிராமமான புர்பா குர்குரியாவுக்கு புறப்பட்டோம்.
பூசப்படாத கரடுமுரடான சாலை, குண்டும் குழியுமான ஒரு மண் பாதைக்கு போகிறது. வளைந்து நெளிந்து செல்லும் சாலை அருகில், ஆழமான மட்லா நதி நீர் பாய்கிறது. நாங்கள் நடந்த அந்த அரை மணி நேர மொத்தமும், மட்லாவில் ஒரு படகும் போகவில்லை. ஆற்றின் மறுபுறம் ஒரு பரந்த, அடர்ந்த காடு.
புர்பா குர்குரியாவில் கிட்டத்தட்ட 5,600 பேர் வசிக்கின்றனர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011). கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்களும், பெரும்பாலான எண்ணிக்கையில் இந்துக்களும் வசிக்கின்றனர். புவனேஸ்வரி பஞ்சாயத்தின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் மீன்பிடித்தலும், விவசாயமும் இரண்டு முக்கிய வாழ்வாதாரங்கள்.
லுட்ஃபோர் வசிக்கும் பேட் டோலா பகுதியை அடைந்ததும், அவரது வீடு எங்கிருக்கிறது என்று கேட்டோம். பேட் டோலாவை ஒட்டியுள்ள காளி மந்திரின் முற்றத்தில், நண்டுகள் நிறைந்த பையுடன் ஒரு இளைஞன் காத்திருக்கிறான். எங்களைப் பார்த்ததும்: "கொல்கத்தாவிலிருந்து வருகிறீர்களா? நான் லுட்ஃபோர் மொல்லாவின் மூத்த மகன். உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்," என்றான்.
லுட்ஃபோர் வீடு அருகில் உள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 1,000 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட இந்த ஒற்றை மாடி வீட்டில், மூன்று சாதாரண செங்கல் அறைகள், ஒரு கான்கிரீட் கூரை, மற்றும் ஒரு வராண்டா உள்ளது. முதலில் பெரிய அறைக்குள் நுழைந்ததும், படுக்கையில் சாய்ந்திருப்பவரிடம் இருந்து ஒரு பலவீனமான குரல் கேட்கிறது: "நான் என்ன செய்வது? இந்த காய்ச்சல் சில நாட்களாக என்னை வாட்டுகிறது." இவரா லுட்ஃபோர் மொல்லா? இவ்வளவு பலவீனமானவரா!








