பார்வையாளர்களை வெளிச்சமற்ற மேடை வரவேற்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் சற்று உயரமான பகுதியில் நிற்கும் நிழல்கள் தெரிகின்றன. “வருடந்தோறும் மலையிலிருந்து ஆறு அடித்து வரும் மணல், கடலுக்கு பக்கவாட்டில் தேங்கி, உப்பங்கழிகளில் தீவுகளை உருவாக்குகிறது.” கேரள எர்ணாகுள கடலோர கிராமங்களின் வரலாறு மற்றும் நிலம் ஆகியவற்றை ஒரு பின்னணி குரல் அறிமுகப்படுத்துகிறது. நிழல்களுக்கு பின்னால் இருக்கும் விளக்கப்படங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முசிறி துறைமுக நகரம் இருந்த கிபி 1341-ல் தொடங்கி தொடரும் வரலாற்றை காட்டுகிறது.
மேடையின் மங்கலான வெளிச்சத்தினூடாக, பத்து கதாபாத்திரங்கள் வீட்டுக்கு முன் தேங்கியிருக்கும் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்வதை காணுகிறோம். ஈர சகதி கால்களின் சத்தத்துடன் பார்வையாளர்களை நோக்கி அவர்கள் நடந்து வர, பின்னணியில் கேட்கும் சைரன் சத்தம் தீவிரமடைகிறது.
மேடையில் உள்ள பத்து பேரில் சைலஜா கே.எஸ். ஒருவர். செவித்தோர்மா என்பது நாடகத்தின் பெயர். இறந்து கொண்டிருக்கும் நபரின் காதுகளில் பிரார்த்தனை சொல்லப்படும் உள்ளூர் கத்தோலிக்க சடங்கின் பெயர் அது. நாடகத்தில் பங்குபெறும் அனைவரையும் போல, சைலஜாவுக்கும் நடிப்பில் அனுபவம் இல்லை. அவரை பொறுத்தவரை உண்மையில் இந்த வீதி நாடகம், யதார்த்தத்துக்கும் புனைவுக்கும் இடையிலான இடைவெளியை மறையச் செய்கிறது.
“குழந்தை பருவத்தில் நான் அதிகம் குறும்பு செய்வேன் என அடிக்கடி என் தாய் சொல்வார். குறும்பு மட்டுமல்ல, சிறு புயல் நான். அந்த நாட்களில் கதை சொல்லி என்னை தாய் சாப்பிட வைப்பார். மென்சூடுடனான சோறு, கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் உப்பும் கலந்து எச்சிலூறும் ருசியை கொடுக்கும்…! 12, 13 வயது இருக்கும்போது ரேகை பார்ப்பவர் ஒருவர் வந்து என் கைரேகையை பார்த்துவிட்டு, ‘ஒருநாள் இவள் வீட்டை ஓட்டாண்டி ஆக்கி விடுவாள். உப்பின் ஒரு துகளை கூட மிச்சம் வைக்க மாட்டாள்!’ எனக் கூறினார். அது என்னை பாதித்தது. அது போன்ற ஒரு விஷயத்தை நான் செய்வேனா? ஆனால் அனைவரும் சிரித்தனர்.
“பல வருடங்கள் கழித்து 2018ம் ஆண்டில் என் தாய் என்னுடன் இருந்தார். சில நாட்கள் என்னுடன் தங்கியிருக்க வந்திருந்தார், பாவம்.” வெள்ளத்தில் தன் தாயை பறிகொடுத்த கதையை கையில் உப்பு ஜாடியை பிடித்துக் கொண்டு பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பார் சைலஜா.
“நாடகக் குழு ஒரு குடும்பம் போல. என் மனநலத்தை சரி செய்ய அது உதவியது. என்னாலும் சமூகத்துக்கு நல்லவை செய்ய முடியும் என கற்றுக் கொண்டேன்,” என்கிறார் 57 வயது சைலஜா குரலில் பெருமையுடன். இல்லத்தரசி என தன்னை சொல்லிக் கொள்ளும் அவர், வீட்டில் செய்த ஊறுகாயை விற்று வருமானம் ஈட்டுகிறார். மிக சமீபத்தில்தான் ஒரு நகைக்கடையில் விற்பனை வேலைக்கு சேர்ந்தார். “2018ம் ஆண்டில் எனக்கு நடந்த துயரத்திலிருந்து மீள வீதி நாடகம் உதவியது. என்னுடைய சொந்த அனுபவங்களை, உயரலைகள் ஏற்படுத்திய வெள்ளங்களை குறித்து தெரியாத மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.”


















