அதிகாலை ஐந்து மணி. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. எனினும் இரண்டு தனித்துவமான அழைப்புகள், இந்த சிறிய ஹதுவா டவுனை எழுப்பி விடுகிறது. ஒன்று மசூதிகளிலிருந்து தொழுகை அழைப்பு விடுக்கும் முவெஜ்ஜினின் குரல்கள். மற்றொன்று அப்பகுதியில் இருக்கும் மூன்று, நான்கு கோவில்களில் உள்ள பஜனை பாடகர்களின் குரல்கள். அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்1 அஷாது அன் லா இலாஹா இல்லல்லா… என்ற மெல்லிசை உச்சாடனக் குரல்களுடன் ஹரே ராம், ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, ஹரே ராம் என்கிற குரல்களும் இணைகிறது. அவற்றோடு இணைந்து எங்கோ அருகாமையிலிருந்து வரும் புல்லாங்குழல் ஒலியும் வெவ்வேறு ஒலிக்கூறுகளை கலந்து ஒலிக்கிறது.
பன்சூரியில் (புல்லாங்குழல்) இசைக்கப்படும் மெல்லிசை கொடுத்த ஆர்வம்தான், 176 வருட பழமையான கோபால் கோவிலுக்குள் இசைஞரை சந்திக்க என்னை இட்டுச் சென்றது. 1850-க்கும் 1866-க்கும் இடையே அப்போதைய ஹதுவா மகாராணியாக இருந்த ஷ்யாம் சுந்தரி குன்வாரால் கட்டப்பட்ட, இந்த கட்டுமானம் ஒரு பழைய கோட்டை, புதிய கோட்டை மற்றும் ஷீஷ் மகால் (கண்ணாடிகளின் மாளிகை) ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு ஒப்பான அந்த காலத்தின் 4,50,000 வெள்ளி நாணயங்கள் செலவில் கட்டப்பட்ட இக்கோவிலின் பெரும் கதவுகளின் முன் ஒரு காவலாளி நின்று கொண்டிருக்கிறார். உள்ளே பரந்திருக்கும் 14 ஏக்கர் நிலத்தில் தோட்டங்களும் ஊற்றுகளும் குளன்க்களும், சமஸ்கிருத பல்கலைக்கழக கட்டுமானமும் பல அறைகள் கொண்ட பிரபல கோவிலும் அமைந்திருக்கின்றன.
ஹதுவா சமஸ்தானத்தை ஆண்ட பழம்பெரும் அரச குடும்பங்களின் வழித்தோன்றல்களின் தனியார் சொத்தாக இக்கோவில் இருக்கிறது. காலையும் மாலையும் இக்கோவில் மக்களுக்கு திறந்துவிடப்படுகிறஹ்டு. கருவறையில் இருக்கும் ராதா கிருஷ்ணா சிலைகளுக்கு பூசாரி ஆரத்தி எடுக்கிறார். அதை பார்த்தபடி அமைந்திருக்கும் தூண்களுடனான ஒரு பெரும் அரங்கில் இசைஞர்கள் தங்களின் தபலா, ஆர்மோனியம் மற்றும் சிம்பல் வாத்தியங்களுடன் அமர்ந்திருக்கின்றனர். அந்த குழுவுக்கு நடுவேதான், என் சக ஊழியர்கள் குறிப்பிட்ட கலைஞரான முகமது சகாய்ர் அன்சாரி இருக்கிறார்.
70 வயது இஸ்லாமிய இசைஞரான அவர் கோபால் கோவில் கடவுளருக்காக தன்னுடைய புல்லாங்குழல் இசையை அளிக்கிறார். அவரின் பணியில் வித்தியாசமாக அவர் ஏதும் இருப்பதாக உணரவில்லை. “எல்லா மனிதர்களும் சமம். நம்மில் எந்த வித்தியாசமும் இல்லை,” என்கிறார். “நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த கலையும் இந்த அறிவும் குதாவின் அருள்தான். அதை பகிர்வதில் எந்தத் தவறும் இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் இங்கு புல்லாங்குழல் வாசித்து வருகிறேன்.”







