“எனது இரு பானைகளை அவர்கள் திருடி விட்டார்கள்!”
ஆனந்த் லோஹர் கோபமாக இருக்கிறார். நாள் தொடக்கமே மோசமாக இருக்கிறது. கோல்பாராவில் வசிக்கும் அவர், பானைச்சாறை மட்டும் இழக்கவில்லை. 90 ரூபாயையும் இழந்திருக்கிறார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சொனாஜுரியிலிருந்து வாங்கிய இரு பானைகளின் விலை அது.
இந்திய பேரீச்சம் மரத்தின் இனிப்பு சாறை சேகரிக்க ஆனந்தாவுக்கு பானைகள் தேவை. பேரீச்சம் மரங்களில் ஏறி வெட்டி சாறு சேகரிக்கும் அவர் ஷியூலி என உள்ளூர் வட்டார வழக்கில் குறிப்பிடப்படுகிறார். அக்டோபர் முதல் ஜனவரி வரை நடக்கும் தொழிலில் வங்காள மாதமான அஸ்வின் மாதத்தில் அவர்கள் மும்முரமாகி விடுவார்கள். வசந்த கால மாதம் அது. வசந்த கால வரவை குறிப்பிடும் வகையில் நள்ளிரவில் பூக்கும் பூவுக்கு பெயரும் ஷியுலிதான்.
முதுமை காரணமாக கூன் விழுந்திருக்கும் 65 வயதுக்காரரான அவர், போல்பூர் டவுனின் செங்கல் சூளை மூடப்பட்ட பிறகு ஆறேழு வருடங்களாக இந்த வேலையை செய்து வருகிறார்.
பானைகள் போனதில் ஆனந்தாவுக்கு வருத்தம். “ஒவ்வொரு பருவகாலத்திலும் இப்படி நடக்கிறது,” என்கிறார். அவர் ஏற வேண்டிய அடுத்த மரம் நோக்கி நாங்கள் செல்கிறோம். காய்ந்த இலைகள் காலடியில் சத்தம் கொடுக்கின்றன. குளுமையான டிசம்பர் காலை என்பதால், குளிரை தவிர்க்க ஒரு தொப்பி அணிந்திருக்கிறார் ஆனந்தா. குத்தகைக்கு எடுத்திருக்கும் மரங்கள், மனசதாலாவிலுள்ள அவரது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூர நடையில் இருக்கிறது. ஆனால் மூச்சிரைப்பு நோய் கொண்டிருக்கும் அவருக்கு இது கடினம். ஏழு எட்டு கிலோ சாறை சுமந்து வரும்போது இன்னும் கடினம்.


































