வாஹ் யா கருவி வளர்ந்தவரின் கைக்குள் அடங்கும் அளவு கொண்டது. வாஹில் (மூங்கில்) இருந்து தயாரிக்கப்படும் இசைக்கருவி, நான்கரை அங்குலம் நீளம் கொண்டது. “காதலின் அடையாளம்,” என்கிறார் சிறு மூங்கிலை உதட்டருகே கொண்டு வந்தபடி ஞப்லோ.
நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் ஞப் விவசாயியாக இருந்தார். நம்மிடம் பேசியபடி, சட்டைக்குள் வைத்திருந்த சிறு இசைக்கருவியை அவர் வெளியே எடுக்கிறார். இடது கையால் அக்கருவியின் ஒரு முனையைப் பிடித்துக் கொள்கிறார். வலது கையால், வண்ண நூல்கள் தொங்கும் மறுமுனையில் இருக்கும் கம்பியை பிடித்துக் கொள்கிறார். பிறகு வாசிக்கத் தொடங்குகிறார்.
ஞாப் அருகே, அறுபது வயதுகளில் இருக்கும் அவரது பால்யகால தோழியரான யிங் லி மற்றும் நேலை ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் மூவரும் ஒன்றாக அவுலாங்குக்கு பயணித்திருக்கிறார்கள்.






