வயது நாற்பதுகளில் உள்ள கரும்பு வெட்டும் தொழிலாளியான ருக்மினி ஷிங்டி தனது மெலிந்த உடலை முழுமையாக வளைத்து கரும்பு தண்டுகளின் இடையே நுழைகிறார். நான்கு பேர் கொண்ட அவரது குடும்பம் சொந்த கிராமத்திலிருந்து நவம்பர் மாதம் வெளியேறியது முதல் இங்கு தான் வசிக்கிறது. மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்ட முலா சர்க்கரை கூட்டுறவுச் சங்கத்திற்கு வெளியே உள்ள கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் காலனியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளில் இவருடையதும் ஒன்று. அவரது குடிசையில் நொறுங்கிய தகரப் பெட்டியில் துணிகளும், கொஞ்சம் தேய்ந்து போன பாத்திரங்களும் உள்ளன.
அங்கிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு குஜராத்தில், மாநிலத்தின் மிகப்பெரிய, முதல் சர்க்கரை கூட்டுறவு அமைப்புகளில் ஒன்றான பர்டோலி கூட்டுறவுச் சங்கத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அறுவடை செய்த கரும்புகளை தொடர்ச்சியாக ஆலைகளுக்கு விநியோகித்த வண்ணம் உள்ளனர். சில வாரங்களுக்கு ஒருமுறை கரும்பு தோட்டங்கள் மட்டும் மாறுகின்றன.
கொய்டாஸ்கள் என்றால் ‘அரிவாள்‘ என்றுப் பொருள். ஆனால் இங்கு ஆலையில் ‘கட்டர்கள்‘ என்று அழைக்கப்படும் அவர்கள் மகாராஷ்டிராவின் கிராமப்புற ஏழைகள். நந்துர்பார், நாஷிக் முதல் புனே, ஜல்கான் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.
மத்திய மகாராஷ்டிராவின் வறண்ட மராத்வாடா மண்டலத்திலிருந்து கிராமப்புற ஏழை மக்கள் ஐந்து லட்சம் பேர், ஆண்டுதோறும் மழைக்காலம் பொய்த்த பின் பிழைப்புத் தேடி இந்தியாவின் மிகப்பெரும் சர்க்கரை உற்பத்தி ஆலைகளுக்கு புலம்பெயர்கின்றனர்
கரும்பு வயல்கள் தெற்கு குஜராத்தில் உள்ள வைரத் தொழில் நகரமான சூரத்தில் தொடங்கி, வளமான மேற்கு மகாராஷ்டிரா முழுவதும் பரவி வடக்கு கர்நாடகாவின் பெல்காம் வரை நீள்கிறது. அறுவடை காலம் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு நல்ல அறுவடை என்பதால், மே வரை நீண்டது. இந்தாண்டு 81 லட்சம் டன் கரும்புகளை அறுவடை செய்து தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வருடாந்திர புலப்பெயர்வு நாற்பது ஆண்டுகளாக தொடர்கிறது. அதற்கான பாதைகளும் நன்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் உள்ள ஆலை முதலாளிகள், 200-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், நிலமற்ற விவசாயிகள் என இயக்கம் தொடர்கிறது. கரும்பு லாபம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகள் கூட்டமைப்பின்(MSSCFF) நிர்வாக இயக்குனர் பிரகாஷ் நாயக்னவாரே தெரிவித்தார். இலாபம் பெருகினாலும் புலம்பெயர்ந்தோர் வாழ்வில் மாற்றமில்லை.
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகளில் மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான பாரதிய ஜனதா கட்சியின் கோபிநாத் முண்டே உட்பட மாநிலத்தின் சில முன்னணி மற்றும் பணக்கார அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளன. கொய்டாக்கள் பெரும்பாலும் மகாராஷ்டிராவின் வரலாற்று ரீதியாக பின்தங்கிய வகுப்பினர், பழங்குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுடைய காணி நிலங்களில் சிறிதளவு நீர்ப்பாசனம் மட்டுமே செய்ய முடிகிறது. இதனால் மானாவாரி விவசாய பருவத்தின் முடிவில் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு முரணாக, அவர்கள் வேலை தேடி புலம் பெயரும் பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிர் பசுமையாக விளைகிறது. அணைகளின் பெரும் வலைப்பின்னல் இதற்கு உதவுகிறது.
மகாராஷ்டிராவின் 172 ஆலைகளில், இப்போது அறுவடையில் வரலாற்று சாதனைப் படைக்கும் வகையில் 24 மணி நேரமும் உழைக்கும் தொழிலாளர் படையை கொண்டிருப்பது மிகப்பெரும் பலம். அது போட்டி நிறைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது. “அதுவே உத்தரபிரதேசத்தில் வெட்டுத் தொழிலாளர்களுக்கு பதில் விவசாயிகளே கரும்புகளை வெட்டுகின்றனர். ஆனால் இங்கு வெட்டிய 24 மணி நேரத்திற்குள் கரும்பு பிழியப்படுகிறது,“ என்று நாயக்னவாரே கூறுகிறார். “ தேசிய சராசரியான 10 சதவிகிதத்தை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவில் அதிகளவாக 11.5 சதவிகிதம் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது.”



