“தொழுநோயாளிகள் அருகில் வந்தால் தங்களுக்கும் அத்தொற்று பாதிக்கும் என்ற நம்பிக்கை 60 ஆண்டுகள் ஆகியும் மக்களிடையே இன்னும் தொடர்கிறது.”
ஆறு தசாப்தங்களுக்கு முன் தொழுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்த, வயது எழுபதுகளில் உள்ள நியமத் உல்லா கான், இக்களங்கம் தொடர்வதாகக் கூறுகிறார். “என் குடும்பம் என்னை மதிக்கிறது. ஆனால் அதை மற்றவர்களிடம் என்னால் எதிர்பார்க்கமுடியாது,” என்கிறார் அவர்.
பரிதாபத்துடன், அருவருப்பாக பார்க்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், குப்வாராவில் உள்ள தனது குடும்பத்தை விட்டு விலகி 2025-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள பெஹ்ரர் தொழுநோய் காலனிக்கு வந்துவிட்டார்.
“இங்கு எல்லோரும் சமம் என்பதால் இங்கு வந்தேன். எனது கிராமத்தைப் போல இங்கு என்னை யாரும் ஒதுக்குவதில்லை,” என்கிறார் அந்த 76 வயது பெரியவர் நியமத். “இந்த இடம் எனக்கு வீடு போன்றது. உயிர் இருக்கும் வரை இங்கு தான் என முடிவு செய்துவிட்டேன்.”
















