பாட்னாவின் தெருக்களில் கொண்டு செல்லப்படும் கண்ணாடி கேடயத்தின் குவிமாட வடிவமைப்பின் அழகிலிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை. “கத்திகள் தொடங்கி கேடயங்களும் அனார்களும் (கண்ணாடி மாதுளைகள்) வாள்முனையைக் கூட பிளக்கும் அளவுக்கு கண்ணாடியில் இருந்து உருவாக்கப்படுகின்றன,” என நகரின் பெருமையான கண்ணாடி கேடயம் பற்றி சொல்கிறார் நாஸ்ரே இமாம்.
நுட்பமாக வடிவமைக்கப்படும் இந்த கண்ணாடி கேடயம் பாட்னாவில் முகரம் ஊர்வலத்தில் காட்சிக்கு வருகிறது. ஒரு காலத்தில் போர்க்களங்களில் பயப்படுத்தப்பட்ட ஆயுதக் கிடங்கை போல இருக்கும் அதில் வாட்கள், கேடயங்கள், வில்-அம்புகள் என பல கைவினை நுட்பங்கள் தேவைப்படும் அலங்காரத்துடன் ஆயுதங்கள் இருக்கின்றன.
பாட்னாவின் தெற்கு பக்கமாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் 40 வயது முகமது நெசர், ஒரு கேடயத்தில் வேலை செய்து முடித்து, அதை தன் மகள்களுடன் கதவுக்கு அருகே நின்று பார்க்கிறார். அற்புதமான அந்த தயாரிப்பு வராண்டாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அருகே சில வீடுகளும் பழைய பகு கலை கான் பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலமும் இருக்கிறது.
“இது ஒரு நபர் செய்யும் வேலை கிடையாது,” என்கிறார் கைவினைக் கலைஞரான நெசார். “பல கைவினைக் கலை நுட்பங்கள் சேரும் பணி இது. பிகார் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சார்ந்த கலைகள் இதில் இடம்பெறும்.”
ஆரி, சர்தோசி, கஷீதா காரி, சாபா, நாக் மாற்றும் சில நேரங்களில் சிபாரில் இடம்பெறும் மீனகாரி போன்ற கலைகளை உதாரணங்களாக சொல்கிறார். (ஆரி என்பது கொக்கி ஊசியைக் கொண்டு நுட்பமான வடிவங்களை துணிகளில் போடும் கலை ஆகும். சர்தோசி என்பது கம்பி நூல்களை பயன்படுத்தும் கலை ஆகும். கஷீதா காரி என்பது பிகாரில் செய்யப்படும் காஷ்மீரி பாணி பூத்தையல் ஆகும். சாபா என்பது உலோக வண்ணங்கள் கொண்ட மர அச்சு)
சிபாரில் மீனாகரி எனாமல் பூச்சும் நாக் கலையும் நுட்பமாக வார்க்கப்படுகிறது. கூரான அலங்கார கற்கள் துணிகளில் பதிக்கப்படுகிறது.



















