பிரியங்கா குமாரி வேகமாக ஓடும் திறன் கொண்டவர். தனது 18 வயது மகளின் வேகம் குறித்து அவரது தந்தை லால் தியோ ஓரான் பெருமையுடன் சொல்கிறார். “பஹூத் தேஜ் தவுடுதி தி பச்பன் சே [குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் வேகமாக ஓடுவாள்],” என்கிறார்.
தினக்கூலியான அவரது நான்கு பிள்ளைகளில் மூத்தவரான பிரியங்கா எஸ்எஸ்சி ஜிடி – அதாவது, துணை இராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
“ஹம்கோ வர்தி பஹன்னா ஹை [நான் சீருடை அணிய ஆசைப்படுகிறேன்],” என்கிறார் அவர் வெட்கத்துடன்.
இனிமேல் தகுதியே பெற முடியாத ஒரு தேர்வுக்கு பிரியங்கா தினமும் பயிற்சிப் பெற்று வருகிறார். துணை ராணுவ மருத்துவப் பரிசோதனையில் ஃபுளோரோசிஸ் நோய் உள்ளதா என பரிசோதிக்கப்படும். அவளது பற்களில் உள்ள புள்ளிகள் மற்றும் மூட்டு வலி ஆகிய இரண்டும் அந்நோயின் அறிகுறிகள் என்பது தகுதியிழப்புக்கு காரணமாகலாம்.
கடந்த நவம்பரில் அவள் தனது கிராமத்திற்கு அருகே உள்ள திறந்தவெளியில் பயிற்சியை தொடங்கினாள். 8.5 நிமிடங்களில் 1,600 மீட்டர் ஓட வேண்டும் என்பது அவளது இலக்கு. “பஹலா தின் ஹம் 7 மினிட் மே ஹி தவுட் கயி [முதல் நாளே நான் 7 நிமிடங்களில் ஓடிவிட்டேன்],” என்று பிரியங்கா பெருமையுடன் சொல்கிறார்.
முதல் ஓட்டத்திற்கு பிறகு அவளது முழங்கால்களில் வலி தொடங்கிவிட்டது. வலி நிவாரணி எடுத்துக் கொள்ள தந்தை பரிந்துரைத்தும் மறுத்துவிட்டாள். “ஒருமுறை எடுத்துவிட்டால் அது பழக்கமாகிவிடும்.” அவளைச் சுற்றியுள்ள பெரியவர்கள் பலரும் வலி பொறுக்க முடியாமல் வலிநிவாரணி எடுத்துக் கொள்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் உள்ளவர்களின் இந்த வலியை அவள் வாழ்நாள் முழுவதும் பார்த்து வருகிறாள்.
சுக்ருவில் உள்ள பெரும்பாலானவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் ஃபுளோரோசிஸால் பாதிக்கப்பட்டவர்கள். குடிநீரில் அதிகளவு ஃபுளூரைட் இருப்பதால் ஏற்படும் மீள முடியாத நிலை. ஃபுளூரைட் பொதுவாக பாறைகள், மண் மற்றும் நிலத்தடி நீரில் காணப்படுபவை. பலாமுவின் அடித்தளப் பாறைகளில் பெரும்பகுதியை உருவாக்கும் வரிப்பாறை மற்றும் கிரானைட் பாறைகள், ஃபுளோரைடு கொண்ட கனிமங்களால் செறிந்துள்ளன. அவற்றின் வழியாக நீர் செல்லும்போது, ஃபுளூரைடு கரைந்து அதனுள் கலக்கிறது.




























