“வீட்டில் உள்ள குழாய்நீர் சில சமயம் மஞ்சள், நீலம், கருப்பு நிறங்களில் அல்லது நுரையுடன் வருகிறது. நீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதைதான் நாங்கள் ஆறு மாதங்களாக பயன்படுத்துகிறோம்,” என்கிறார் மேற்கு டெல்லியின் பீராகாரி கிராமத்தில் வசிக்கும் 22 வயதான தையல்காரர் ரோஷன். அவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வயிற்று வலியும், காய்ச்சலும் உள்ளது. நான்கு பேர் கொண்ட அவரது குடும்பத்தில் மேலும் சிலருக்கு உடல்நிலை சரியில்லை.
ஒருகாலத்தில் தலைநகரின் புறநகர் கிராமமாக இருந்த பீராகாரி, இப்போது நகர்ப்புற விரிவாக்கத்தால் முற்றிலும் மாறிவிட்டது. இங்கு வசிக்கும் டஜன் கணக்கான மக்கள் மாசடைந்த குழாய் நீரை குடித்ததால் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் 1000 வீடுகளுக்கு 2024 ஜூன் முதல் நகராட்சி வழங்கி வரும் நீரில் துர்நாற்றம் வீசுகிறது.
பீராகாரியின் சந்துகளில் டஜன் கணக்கான சிறு, பெரு தொழிற்சாலைகள் உள்ளன. இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும்ஆலைகளே அதிகம் இருந்ததாக உள்ளூர் மக்கள் சொல்கின்றனர். கால போக்கில், பெயின்ட், டைகள், ஷூக்கள், எலக்ட்ரானிக்ஸ், மோட்டார்கள் போன்ற பிற பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் வரத் தொடங்கின.
இந்த ஆலைகளில் ஒன்றில் தினக்கூலியாக ரோஷனின் தந்தை பிஸ்வாநாத் வேலை செய்கிறார். பீகாரிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியின் பீராகாரிக்கு வந்த அவருக்கு உணவு, குடிநீர், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளை வழங்கி சொந்த ஊராக உணரச் செய்துவிட்டது.
பிஸ்வாநாத் குடும்பத்தைப் போன்று பீராகாரியின் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் மாத குடும்ப வருமானத்தில் இருந்து சுத்தமான குடிநீருக்காக தினமும் ரூ.100 செலவிடுகின்றனர்.














