“நான் சிறுவயது முதலே புரட்சியாளர் தான். நான் அநீதிக்கு எதிராக போராடுகிறேன்,” என்கிறார் காலஹந்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கர்லாகான் கிராமத்தைச் சேர்ந்த தலித் கவிஞரும், பாடகரும், செயற்பாட்டாளருமான ராஜ்கிஷோர் சுனானி. “இந்த இயக்கத்தில்[நியாம்கிரி மலையில் பாக்ஸைட் சுரங்கத்திற்கு எதிரான] நான் 2002-03ல் இணைந்தேன். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை எழுதினேன். இந்த இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கிராமம் கிராமமாக பயணித்தேன்,” என்றார்.
“அப்போது நானும், என் மனைவி லீலாவதியும் இந்த கிராமத்தில் வசித்துக் கொண்டு பாடல்களை பாடினோம்,” என ராஜ்கிஷோர் நினைவுகூர்கிறார். மக்கள் இத்தம்பதிக்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளில் உணவு, உறைவிடம் அளித்துள்ளனர். தங்கள் சொந்த கிராமத்திலேயே சாதாரண விவசாயிகளாக இருந்த சுனானிகளுக்கு அப்போது வருமான ஆதாரம் ஏதுமில்லை, பழங்குடிகளின் ஆதரவில் அவர்கள் உயிர் வாழ்ந்தனர். "வேதாந்தாவுக்கு எதிராக போராடியதற்காக நானும், எனது மனைவியும் 2004-ல் சிறைக்குச் சென்றோம். நான் மூன்று மாதங்களும், லீலாவதி ஒரு மாதமும் காவலில் வைக்கப்பட்டோம். இன்றும் கூட, அரசுக்கும், நிறுவனங்களும் [சுரங்கம்] இணைந்து மக்கள் இயக்கங்களை நசுக்குவதைத் தொடர்கின்றன", என்று அவர் கூறுகிறார்
தென்மேற்கு ஒடிசாவின் காலஹந்தி, ராயகடா மாவட்டங்களில் பரவியுள்ள நியாம்கிரி மலைகளில், டோங்கிரியா கோந்த் (அல்லது ஜர்னியா கோந்த், அவர்களில் பலர் தங்களை இப்படித்தான் கூறிக்கொள்கிறார்கள்) வாழ்கின்றனர். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு (PVTG) 8,000 பேர் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; பிற பழங்குடியின குழுக்கள் இங்கு சுமார் 100 கிராமங்களில் வாழ்கின்றன.
அரசுக்கு சொந்தமான ஒடிசா சுரங்க நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெர்லைட் தொழிற்சாலைகள் (இப்போது வேதாந்தா) ஆகியவற்றின் திட்டத்தை டோங்கிரியா பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். மாநிலத்தின் லஞ்சிகர் தாலுகாவில் உள்ள வேதாந்தாவின் சுத்திகரிப்பு ஆலைக்காக பாக்சைட் எடுக்க (அலுமினியம் தயாரிக்கப் பயன்படுகிறது) அவர்களின் புனித மலைகளை சுரங்கப்படுத்த இந்த திட்டம் முன்மொழியப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2013 ஆம் ஆண்டு, நியாம்கிரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நடத்தப்பட்ட கட்டாய வாக்கெடுப்பின் மூலம் பழங்குடிகள் தங்கள் நிலத்தை சுரங்கப்படுத்துவதை ஒருமனதாக நிராகரித்தனர். பழங்குடிகளின் கூட்டமைப்பான நியாம்கிரி சுரக்ஷா சமிதி மற்றும் ராஜ்கிஷோர் போன்ற பல செயற்பாட்டாளர்களால் இந்த இயக்கம் வழிநடத்தப்பட்டது.
வாக்கெடுப்பை ரத்து செய்ய ஒடிசா அரசு முயற்சித்தது (இதுவரை வெற்றி பெறவில்லை). மற்ற ஆதாரங்கள் வழியாக பாக்சைட் பெற்று சுத்திகரிப்பு ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முன்னோர்களின் நிலத்திற்கான அச்சுறுத்தலும் பழங்குடியினருக்கு தொடர்கிறது.



