சாலை முடிவதற்குள் ஜிபிஎஸ் சிக்னல் நின்றுவிடுகிறது.
தெற்கு நாக்பூரின் ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் பன்சோலி (சவாங்கி) கிராமத்தின் வெளியே உள்ள குறுகிய தார்ச் சாலை பருத்தி, துவரை வளர்ந்துள்ள வயல்களுக்கு இடையே கோடு கிழித்தது போல புழுதியை கிளப்புகிறது.
கிர்சான் ஜக்மால் ரபாரி இருசக்கர வாகனத்துடன் காத்திருக்கிறார். நமது கார்களை இங்கு விட்டுச் செல்ல வேண்டும் என்று அந்த 45 வயதுக்காரர் வலியுறுத்துகிறார். ஏற்கனவே சுமார் 2,500 செம்மறிகள், ஆடுகள் நிரம்பியுள்ள அவரது வண்டிகள் ஆழமற்ற ஓடையை கடந்துவிட்டது. கார்களால் அதை கடக்க முடியாது.
மறுபுறம் நான்கு குடும்பங்கள் – கிர்சனின் டேராவுடன் நகர்கின்றன. அவர்களது உடைமைகள் கொண்ட இரண்டு மெட்டல் மாட்டு வண்டிகளை காளைகள் இழுத்துச் செல்கின்றன – தார்பாய்கள், சமையல் பாத்திரங்கள், சுருட்டிய துணிகள், சிறிய பானைகள், கயிறுகள், வலைகள் மற்றும் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. பெண்கள் தங்கள் பாரம்பரிய கருப்பு நிற மூன்று பகுதி உடைகளை அணிந்துள்ளனர் – சோலி (சட்டை), காக்ரா (பாவாடை), லுட்கி (முக்காடு) அணிந்தபடி வண்டிகளை ஓட்டுகின்றனர். செம்மறி, ஆடுகளின் குட்டிகள் சத்தமிடுகின்றன. மேய்ப்பராகும் பயிற்சியில் கயிற்றில் கட்டப்பட்ட குட்டிநாய் குரைக்கிறது.
வண்டிகள் நிற்கிறது.












