“இளமையாக இருக்கும்போது நாங்கள் இதை நிறுத்துவோம் என நினைத்து கூட பார்த்திருக்கவில்லை.”
ஆனால் ராதா தேவியின் வீட்டுப் பரணில் தூசு அடர்ந்து கிடக்கும் கருவிகள் வேறு கதையை சொல்கின்றன. போர்வைகளை நெய்ய பல ஆண்டுகளாக அவருக்கு உதவிய சுழலும் சக்கரமும் தறியோட்ட பயன்படும் பழைய மர நாடாவும் அமைதியாக கிடக்கின்றன.
“நூல் சுற்றும் திறன் என் கையை விட்டு சென்று கொண்டிருக்கிறது,” என்கிறார் போஜ்பூரை சேர்ந்த நெசவாளரும் நூல் சுற்றுபவருமான அவர். “அந்தப் போர்வைக்கு பிறகு (2016ம் ஆண்டில் நெய்தது) ஒரு போர்வை கூட நான் நெய்யவில்லை,” என அவர் சுட்டிக் காட்டும் போர்வை அடர்த்தியாக கோடுகளுடன் பழுப்பு நிறத்தில் இருக்கிறது.
”என் இள வயதிலிருந்து இவற்றை நான் செய்து வருகிறேன். என் தாய், அத்தை, பாட்டி அனைவருடன் சேர்ந்து செய்தேன்,” என்கிறார் தன் வயது தெரியாதளவுக்கு மூப்பு கொண்டவர். “இந்திரா காந்தி காலத்தில் இருந்தவள் நான்!” என்கிறார்.
“இது எங்கள் சாதி,” என்கிறார் ராதா தேவி. “தொடக்கத்திலிருந்து இதைத்தான் செய்து வருகிறோம்.”
பச்சை மற்றும் வெளிர் சிவப்பு புடவை கட்டியிருக்கும் ராதா தேவி, வீட்டின் செங்கல் சுவருக்கு முன் நின்று கொண்டு, தன் எட்டு மற்றும் ஒன்பது வயதில் நெய்ய கற்றுக்கொண்டதை விவரிக்கிறார். அவரின் தந்தையும் தாத்தாவும் நூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கொண்டிருந்தனர். குடும்பத்திலுள்ள பெண்கள், கம்பளியில் செய்யப்பட்ட போர்வைகள் மற்றும் குளிர் ஆடைகளை நெய்வார்கள். ஆண்கள் அவற்றை பக்கத்து ஊர்களில் விற்பார்கள். அவரும் இதே பாணியைத்தான் திருமணத்துக்கு பிறகு கண்டார். அவரின் கணவரும் தாத்தாவும் ஆடுகளை வைத்திருந்தனர். அவரின் மாமியார் போர்வைகளை நெய்தார்.












