“ஏழு மூட்டை அறுவடையை அதன் தந்தத்தின் ஒரு குத்து அழித்துவிட்டது.”
ஒரு வருடம் கழிந்தும், தம்பாரெங்க்புயி வீட்டில் ஒற்றை யானை ஏற்படுத்திய சேதத்தை ராம்பரா மறக்கவில்லை.
ஏழு மூட்டை விளைச்சல், 10-12 கிலோ இருக்கும் ஐந்து கடுகு தகர கொள்கலனுக்கு சமம். மிசோரமில் தகர கேன்களை கொண்டுதான் பாரம்பரியமாக மூட்டைகளின் எடையை கணிக்கிறார்கள்.
“யானை நக்கிய பிறகு இப்போது கடுகு மோசமாகிவிட்டது,” என்கிறார் அவர். மூங்கில் கண்காணிப்பு கூடத்துக்குள் இருந்த நெல்லையும் வெறும் நாக்கை அழுத்தி யானை அழித்துவிட்டது.
ஆனால் 73 வயது ராம்பரா மன்னிக்கும் சுபாவம் கொண்டவர். “மயூங் (யானை) நல்லது. மனிதர்களை அது தாக்குவதில்லை. அதிகபட்சம் பயிர்களை அழிக்கும். உணவு தேடி வரும். பிறகு சென்றுவிடும்.” விவசாயியும் மூங்கில் கைவினை கலைஞருமான ராம்பரா ரியாங் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்.
யானை கூச்சமான விலங்கு என்கிறார் அவர். “மனித சத்தம் கேட்கும்போதெல்லாம், நீண்ட காதுகளை தாழ்வாக தொங்கி விட்டுக்கொள்ளும்.” விவசாய நிலங்களில் யானையின் வருகை குறைந்திருக்கிறது. 2022ம் ஆண்டில் மூன்று அல்லது நான்கு முறை சூறையாட வந்த யானை, 2024ம் ஆண்டில் இரண்டு முறை என குறைந்து, 2025ம் ஆண்டில் ஒரே ஒருமுறை என்றாகிவிட்டது.















