குடிசை வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் 48 வயது கோமதி வீரய்யன், குடும்பத்துக்கான காலை உணவை வேகமாக செய்து விடுகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி தாலுகாவிலுள்ள பழையாரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாண்டவன்குளத்தில் தலித்கள் வசிக்கும் அண்ணாநகரின் வழக்கமான காட்சி இது. இங்குள்ள பல பெண்களின் அன்றாடம் போல, கோமதியின் நாளும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பே தொடங்கி விடுகிறது. பக்கத்திலிருக்கும் குழாயில் நீர் பிடிப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, திறந்தவெளியின் விறகடுப்பில் சமைப்பது ஆகியவைதான் அன்றாடக் காலைப் பணிகள்.
”கேஸ் சிலிண்டர் கிடைக்கும், ஆனா இதுதான் செலவு குறைவு,” என பானையை கிண்டி கொண்டே சொல்கிறார் கோமதி. மகன், மாமியார், கணவர் ஆகியோருக்கு காலை மற்றும் மதிய உணவை சமைத்து முடிக்கும்போது, அவர் சாப்பிட நேரம் இருப்பதில்லை.
மீன் காய வைக்கும் வேலையை அவர் செய்யும் பழையார் மீன்பிடி துறைமுகத்துக்கு விரைகிறார். ஆற்றோட்டங்களும் நிலவின் சுழற்சியும் தீர்மானிக்கும் அவரது வேலைதான், அவரது அன்றாடத்தை வடிவமைக்கிறது.
பெண்கள் ஒவ்வொருவராக வீட்டுவேலைகளை முடித்து, ஆற்றங்கரையில் தாழ்வலை வரும் நேரத்தில் அடைந்திட கிளம்புகிறார்கள். பழையாரில் மீன் காய வைக்கும் வேலை என்றால், பக்கத்து பேருந்து நிறுத்தத்துக்கு எட்டு மணிக்கெல்லாம் பேருந்து பிடிக்க செல்கிறார்கள். அலையை பொறுத்துதான் அவர்களின் நேரம் அமைகிறது. “பழையார் மட்டும்தான் நம்ம ஜனங்களுக்குசோறே! சுற்றுப்புறத்தில் உள்ள பல ஊர்களுக்குபழையார்தான் எல்லாம்,” என்கிறார் பழையார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் காய வைக்கும் கோமதி.
கொள்ளிடம் ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்தில் பழையார் மீன்பிடித் துறைமுகம் இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் (2020ம் ஆண்டு நாகப்பட்டின மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டம்) இருக்கும் இந்த மீன்பிடித் துறைமுகம், தமிழ்நாட்டின் 12 மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும். தங்களின் பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அந்த துறைமுகம் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் பல ஆண்டுகாலமாக கோமதி வீரய்யன் மீன் காய வைக்கும் வேலையை செய்கிறார். ”எங்க வாழ்க்கை பழையார நம்பித்தான் இருக்கு,” என விளக்குகிறார் கோமதி. “இங்கதான் பொறந்தோம்.இங்கேயே தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இங்கதான் வாழ்றோம். முன்னாடிலாம் நெல்லு, தானியம், பருப்புன்னு நெலத்துல வேலை பார்த்தோம். இப்போ அதெல்லாம் இல்ல. ஒண்ணு மழை அதிகமா பெய்யுது.. இல்ல பெய்யவே மாட்டேங்குது… பயிர் நாசமாயிடுது.”
”நான் 15 வயசுல இருந்தே ஆத்துல இறால் தடவுறேன். என் அம்மா, மாமியார் எல்லாருமே ஆத்துல இறால் தடவினவங்கதான்,” என்கிறார் அவர். “வயித்துல குழந்தையைவைச்சுக்கிட்டு கூட இறால் தடவி இருக்கேன். என் பிள்ளைகளை இந்த வருமானத்துலதான் படிக்க வைச்சேன். உயிருள்ளவரைக்கும் இறால் தடவி தான் ஆகணும்,” என்கிறார் கோமதி.
மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரின் வசிப்பிடத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வேலை செய்கின்றனர். “காலை 6 மணி பஸ்ஸுக்கே இங்க இருக்கற பொம்பளைங்க கிளம்பிடுவாங்க. இறால், மீன், கணவாய் மீன எல்லாம் சுத்தம் செஞ்சு உப்பு போட்டு பதப்படுத்தி, நாலைஞ்சு தடவை காய வைச்சு தனித்தனியா பிரிச்சுமூட்டைப் போட்டு வைக்கற வரைக்கும் எல்லாவேலையையும் செய்வாங்க,” என கூறும் கோமதி, பட்டியல் சாதியான பறையர் சமூகத்தை சேர்ந்தவர்.




















