தேன்கூட்டில் தேன் எடுக்கும்போது பாம்பு இருக்கும். “தேன்கூட்டிற்குள் பாம்பு இருக்கும் போது தேனீக்கள் நம்மை [தேன் எடுப்பவரை பாதுகாக்க] தேன் எடுக்க அனுமதிக்காது, பாம்பும் நகர்ந்து சென்றுவிடும்,” என்கிறார் பிக்காபதிமுண்டு கிராமத்தின் கதே குட்டன். சுவை நிறைந்த தேன்கூட்டை கைகளால் எடுக்க தேன் சேகரிப்பாளர்கள் வருகின்றனர். “தேன் வேட்டைக்கு வருபவர்களை கடிக்க மாட்டேன் என்று “பாம்பு” தேனீக்களுக்கு சத்தியம் செய்துள்ளது.”
ஆனால் தேன் எடுப்பவர் பரிசுத்த மனம், உடலுடன் தேன் எடுக்க வரவேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு கதை.
கதேவைப் போன்று தில்தோஷ் குட்டனும் தேன் வேட்டையர் தான், அவரும் 35 தோடர்களை கொண்ட பிக்காபதிமுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர். எருமைகள் மேயும் புல்வெளியை ஒட்டியுள்ள ஷோலா வனத்தின் எஞ்சியுள்ள பகுதிகள் வழியாக அவர் நம்மை தனது மகனுடன் அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள் எனும் பழங்குடியினர் வசிக்கின்றனர். மேய்ப்பர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக சைவ உணவு முறையை கடைபிடிக்கின்றனர். பூமி தாயை வணங்கும் நோக்கில் அவர்கள் செருப்பின்றி வெறும் கால்களில் நடக்கின்றனர்.
சிற்றோடையை கடந்து ஒரு சரிவில் ஏறிய பிறகு, ஒரு பெரிய மரத்தில் கவனிக்கப்படாத சிறிய துவாரத்தை தில்தோஷ் சுட்டிக்காட்டுகிறார். துவாரத்தின் பெரும்பகுதியை முலாம்பழ அளவிலான பாறை மறைக்கிறது, அதைச்சுற்றிலும் தேனீ கூட்டம் பறக்கின்றன. இவை ஆசியா முழுவதும் காணப்படும் ஆசிய தேனீ (அபிஸ் செரினா) எனப்படுகிறது. இவை எளிதில் பழக்கி தேனீ பெட்டிகளில் வளர்க்கக் கூடிய இனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.
ஆனால் தோடர்கள் தேனீக்களின் இயற்கையான வாழ்விடங்களில் தேன் எடுக்கவே விரும்புகிறார்கள். நீலகிரியின் தேன் எடுக்கும் பிற பழங்குடியினர் போன்று தோடர்கள் காட்டுத்தேன் சேகரிக்கும் போது தீ மூட்டுவது, புகைப்போடுவது இல்லை. அவர்கள் தேன் கூட்டை கண்டவுடன் குன்றுகளில் திரியும் கரடிகள் வராமல் தடுக்க அதன் முன் கல் வைத்து மறைக்கின்றனர். தேன் எடுக்கச் செல்லும்போது, கல்லை அகற்றிவிட்டு தேன்கூட்டிற்கு அருகில் சென்று மெதுவாக ஊதிவிடுகிறார். இதில் தேனீக்கள் மெல்ல வெளியேறுவதால் எளிதில் தேனை எடுக்கிறார்.





