“நீர் நாற்றமடிக்கிறது. ஆனால் நமக்கு வேறென்ன வழி இருக்கிறது?”
சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும், டெல்லியின் யமுனை ஆற்றில் பச்சா தேவி முங்கியெழ தயாராகிறார். நொய்டா, டெல்லி மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளிலிருந்து கலிந்தி குஞ்ச் பகுதிக்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கானோரில் அவரும் ஒருவர். வருடந்தோறும் சூரியன், நீர், காற்று மற்றும் இயற்கை ஆகியவற்றை போற்றி கொண்டாடப்படும் சத் மகாபர்வம் என்கிற விழாவுக்காக நவம்பர் மாத முதல் வாரத்தில் அவர்கள் வந்திருந்தனர்.
நான்கு நாட்கள் நடக்கும் சத் பூஜையின் முக்கியமான மூன்றாம் நாளான சந்தியா அர்க்யா நாளன்று, இடுப்பளவு நீருக்குள் மணமான பெண்கள் முங்கி இரண்டு மணி நேரங்களுக்கு அஸ்தமிக்கும் சூரியனை வணங்குவார்கள். டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு, கடுமையாக மாசடைந்திருக்கும் யமுனை ஆறுதான் விழாவை கொண்டாட இருக்கும் ஒரே வழி.



















