எழுத்தறிவு இயக்கம் முழு வீச்சில் இருந்த சமயம், நான் அரசு ஊழியர் ஒருவருடன் அஜ்மர் மாவட்ட கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். பள்ளியின் பிரதான சுவற்றில் கொட்டெழுத்துகளில் கிராஃபிட்டி ஒன்று எழுதப்பட்டு இருந்தது: ‘சக்ஷர்தா கி கியா பெஹ்சான்? ஊப்பர் சட்டி, நீச்சே பனியன் (படித்தவரை எப்படி கண்டறிவது? கால்சட்டை மேலேயும், பனியன் கீழேயும் அணிந்திருப்பார்).‘
குழப்பமடைந்த நண்பர், கிராமத்தினரிடம் விசாரித்தார். “நீங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்துவதில்லை. கிராமத்தில் தங்கி வேலை செய்ய பிடிக்காமல் ஆசிரியர்கள் வருவதில்லை என காரணம் சொல்வீர்கள். உங்கள் போக்குவரத்தும் முறையாக இயங்குவதில்லை. ஆர்வமிருந்தும் எங்கள் பிள்ளைகளால் படிக்க முடியவில்லை. ஒருக்கட்டத்தில் நாங்கள் மனச்சோர்வு அடையும்போது, கல்வி கற்பிக்கவென நீங்கள் வருகிறீர்கள். தயவுசெய்து எங்களுக்காக பள்ளியை மட்டும் ஒழுங்காக நடத்துங்கள்,“ என்றனர்.
ராஜஸ்தானில் அடுத்தடுத்து வந்த அரசுகளுக்கு இவர்களின் கோரிக்கை எட்டவில்லை. ஆளும் வர்க்கத்தினரின் பிள்ளைகள் கட்டணம் அதிகமுள்ள தனியார் பள்ளிகளில் படிப்பது காரணமாக இருக்கலாம். எனினும் கிராமங்களிலுள்ள 17000 பள்ளிகளை மூட முடிவு செய்திருக்கும் தற்போதைய அரசு, இதுவரையிலான அரசுகளை விட பயங்கரமானது என்று நிரூபித்துவிட்டது. எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட மக்கள் போராடியபோது, கல்விக்கு செல்ல வாய்ப்பில்லாதவர்கள் தேர்தல்களில் நிற்க முடியாது என சொல்லப்பட்டது.
தேர்தலில் போட்டியிட தடை
ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடப்பதற்கு, ஒருநாளுக்கு முன்பு 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அவசர சட்டம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற மக்களுக்கு இந்த உத்தரவு கோபமூட்டியது. கிட்டத்தட்ட 95 சதவிகித கிராமப்புற பெண்களையும், 80 சதவிகித வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய இந்த உத்தரவு வகை செய்கிறது. தன்னிச்சையான இம்முடிவு பல சந்தேகங்களை எழுப்புகிறது.
ஜனநாயகத்தின் அடிமட்டத்தையும், படித்த பணக்காரர்கள் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட உத்தரவாகவே இது தெரிகிறது. கல்வி கற்காமல் போனதற்கான பழியையும் கற்க வேண்டியதற்கான சுமையையும் ஒரே நேரத்தில் மக்கள் மீது இந்த உத்தரவு சுமத்தி, ஒரு சிலரின் கைகளில் அதிகாரம் நீடிப்பதை உறுதி செய்கிறது. அனைத்து தரப்பினரின் குரலுக்கும் அரசுகள் செவிமடுக்க வேண்டும். கல்வி சென்றடையாமல் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் ஆக்கக் கூடாது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர்தான் இந்த உத்தரவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனது வாழ்வின் 40 ஆண்டுகளில் ஜனநாயகம், விழுமியங்கள் மற்றும் நிர்வாகம் பற்றி, ஏட்டறிவு இல்லையென்றாலும் பட்டறிவு அதிகம் கொண்டிருந்த கிராமப்புற மக்களிடமிருந்துதான் பயிற்சி பெற்றேன். எங்களின் திறமைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களின் திறமைகளை பதிலுக்கு நாங்கள் கற்றுக் கொண்டோம். ஹர்மாராவின் (அஜ்மீர் மாவட்டம்) தலைவராக இருக்கும் நருட்டி கல்வியறிவு பெறாதவர். ஆனால் 50 வயதில் கணிணியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். மேலும் நடுநிலை, உயர்நிலை கல்வியை இடைநிறுத்தியவர்களுக்கு கணினியை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர் கற்பிக்கிறார். அவரிடம் 8 ஆம் வகுப்பு சான்றிதழ் இல்லை. ஆனால் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வலைத்தளத்தை சிறப்பாக பயன்படுத்துகிறார். எங்களில் யார் அதிக திறமைசாலி என சொல்லிவிட முடியாதளவுக்கு அவர் செயல்படுகிறார். நருட்டி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்றோ, அவர் எனக்கு ஷேக்ஸ்பியரைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றோ நான் கூறவில்லை. ஆனால் அவர் ஊராட்சி நிர்வாகத்தில் சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
கலிலியோ, காளிதாசர் ஆகியோரின் அறிவியல் சிந்தனையை கற்றது உலகக் கண்ணோட்டத்தை மதிப்புமிக்கதாக மாற்றியது. ஆனால் சவாலான பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நருட்டியைப் போல, முக்கியமான சிக்கலில் நியாயமான முடிவை ஒரு பஞ்சாயத்துக் குழு எடுக்க வைக்க தேவைப்படும் நுட்பம் எனக்கு தெரியாது. சாதி, பணம் போன்ற எவ்வித பக்கபலமும் இன்றி சதி முறையை அவர் எதிர்த்து நின்றது போல என்னால் எதிர்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஒழுங்குமீறிய, நியாயமற்ற மக்கள் உருவாக்கும் சூழலிலும் சரி, தனக்கு புரிபடாத எழுத்து ஆவணங்களிலும் சரி, நிச்சயம் அவர் சிக்கிக் கொள்ள மாட்டார்.



