“மணமகளின் தாய், கைகளால் நெய்யப்பட்ட தௌரிகளைத் தவிர வேறு எதையும் பரிசளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்,” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சந்திரவதி தேவி. “எங்களால் விலையுயர்ந்த பரிசுகளை வாங்க முடியாது. அதனால், எங்கள் பாரம்பரியத்தில் இதைத்தான் பரிசளிப்போம்,” என்று வரவிருக்கும் குடும்பத் திருமணத்திற்கான பரிசுகளைக் குறிப்பிடுகிறார்.
பனியா சாப்பர் கிராமத்தில் வசிக்கும் 45 வயதான இவர், உலர்ந்த மூஞ்ச் புல்லில் இருந்து தௌரி எனப்படும் கூடைகளை நெசவு செய்வதில் திறமையானவர். இந்த கைவினைப் பொருட்கள் மணப்பெண்களுக்கு ஒரு சிறந்த பரிசாக அமைவதோடு, இவர்களின் திருமண சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. சந்திரவதி, அரை பிகா விவசாய நிலத்தைக் கொண்ட ஒரு விவசாயி. அவர் தனது ஓய்வு நேரத்தில் நெசவு செய்கிறார்.
தௌரி பல பயன்பாடுகளைக் கொண்டது. "தானியங்கள், இனிப்புகள், மாவு மற்றும் காய்கறிகளை சேமிக்க, எங்களிடம் அலமாரிகள் இல்லை. அதற்கு பதிலாக நாங்கள் தௌரிகளைப் பயன்படுத்துகிறோம்," என்கிறார் சந்திரவதியின் 18 வயது மகள், புஷ்பா.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அவரின் வீட்டில், கட்டுகட்டாக மூஞ்ச் புற்கள் சுவர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் என்பதால், இந்த காட்டு புல் அறுக்கப்பட்டு, கோடை வெயிலில் உலர்த்தப்பட சேமிக்கப்பட்டுள்ளது.














