ஒரு பழங்கால மர சேணம், ஒரு பழைய தறி, ஒரு மர போலோ விளையாட்டு குச்சி, புல் செருப்புகள், பழைய வெள்ளி நகைகள், நொறுங்கிய ஷீனா கவிதை கையெழுத்துப் பிரதி, மணப்பெண்களுக்கு ஆபரணங்களாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீப்புகள் மற்றும் பல. இவை பஷீர் அஹ்மத் தேரூ தனது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கும் பழங்கால உபயோகப் பொருட்களில் சில.
பஷீர், தார்த்-ஷின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இப்பழங்குடியினர் பெரும்பாலும் குரேஸ் மற்றும் டிராஸில் வசிக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக, குரேஸ் பள்ளத்தாக்கு முழுவதும், மக்கள் விலைமதிப்பற்ற பாரம்பரியப் பொருட்களையும், பிற பழைய அன்றாடப் பயன்பாட்டு பொருட்களையும் தாவரில் உள்ள, பஷீர் நிர்வகித்து வரும் தார்த்ஷின் அருங்காட்சியகத்திற்கு ஒப்படைத்து வருகின்றனர்.
“மக்கள் பயனற்றவை எனக் கருதி, தங்கள் வீடுகளில் இருந்து பழங்காலப் பொருட்கள், பயன்பாடற்ற விவசாயக் கருவிகள் அனைத்தையும் தூக்கி எறிவதையும், பழைய துணிகளை எரிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் நினைவுகூருகிறார். அதனால், முன்னர் காலாவதியானதாக தூக்கி எறியப்பட்ட, எரிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்டவைகள், இப்போது அவரது அருங்காட்சியகத்தில் குடி புகுந்துள்ளன.
ஒரு மாநில சுகாதார ஊழியராக, தனது பணி, தனது மக்கள் வரலாற்றின் அருங்காட்சியகத்தை நிர்வகிக்க உதவியது என்று பஷீர் நம்புகிறார். 44 வயதான அவர், மக்கள் தன்னை நம்புகிறார்கள் என்றும், அது அருங்காட்சியகத்தை நிர்வகிக்க மிகவும் உதவுகிறது என்றும் கூறுகிறார். காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக்கில், குளிர்கால பனி வருடத்தின் ஆறு மாதங்களுக்கு குடியிருப்பாளர்களை வெளி உலகத்தை விட்டு துண்டிக்கிறது. மேலும் மாநில சுகாதார வசதிகள் அதிகமாக கிடைப்பதில்லை. பஷீர் போன்ற, சமூக சுகாதார ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள். அவரை மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.


















