“ஷில்-கடா-ஆவோ!”
வடக்கு சோனார்பூர் அருகே உள்ள காரியாவில் லால்பாபு மஹதோவோவின் கீச்சிடும் குரல் ஒலிக்கிறது. மதிய நேரத்தில் அவரது குரலுடன் கொல்கத்தாவின் அருகே உள்ள சந்தையிலிருந்து சில பேச்சுக்குரல்களும் கேட்கின்றன.
“ஷில்-கடா-ஆவோ!” அவர் மீண்டும் அழைத்தபடி, அம்மிக்கல் குத்தும் வேலைக்கு வாடிக்கையாளர்கள் அழைப்பார்கள் எனும் நம்பிக்கையுடன் உற்சாகமாக சந்துகளில் நடக்கிறார். மேற்குவங்கத்தில் கிரானைட் கல்லை செதுக்கி அம்மிக்கல் எனும் அரைப்பு கருவியை தயாரிக்கின்றனர். ஷில்நோரா அல்லது சில் பட்டா அல்லது தமிழில் அம்மிக்கல் என அழைக்கப்படும் இந்த அரைப்பு கருவி இந்திய சமையலுக்கு மசாலா பொருட்களை பொடிக்கவோ, ஈரமான களிம்பாக மாற்றவோ உதவுகிறது. அம்மியில் குழவியை அழுத்தும் போது, மூலிகை, மசாலா பொருட்களின் நறுமணம் உடைந்து பரவும் என்று இந்திய சமையல்காரர்கள் நம்புகின்றனர்.
“மசாலாவை நன்கு பொடியாக்குவதே இதன் முதன்மை வேலை. இந்த தரத்தை எந்த ஒரு ஆடம்பர மிக்சியாலும் ஈடு செய்ய முடியாது,” என்பதே அம்மிக்கல் குறித்த லால்பாபுவின் இறுதி வார்த்தை.
“அம்மிக்கல் வடிப்பதை தொழில்முறையாக ஏற்க ஒரு சிலரே முன்வருகின்றனர். நாங்கள் தான் இதில் கடைசி தலைமுறை,” எனும் லால்பாபு, பீகாரின் சிவான் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர். “10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தபோது கிண்டர்போரில் மட்டும் 250 பேர் இத்தொழிலை செய்து வந்தனர். இப்போது அவர்களில் நிறைய பேருக்கு வயதாகிவிட்டது. ஓய்வுபெற்றுவிட்டனர். இதுபோன்ற கடினமான வேலைக்கு தகுதியற்றவர்களாகிவிட்டனர்.”












