திரிபுராவின் தருமாநகரில் உள்ள கிராமத்தின் மையப்புள்ளியாக இருக்கும் பிரம்மாண்ட சிவன் சிலையை சுற்றி போரோ கலிபரிர் ஏரி உள்ளது. இங்கு ஒவ்வொரு நாள் மாலையும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் நகர இரைச்சலுக்கு நடுவே அமைதி தேடி குவிகின்றனர். இயந்திரங்களின் இரைச்சல், வாகனங்களின் பொறுமையற்ற ஒலிப்பான் சத்தம், பரபரப்பான கூட்டம் என அனைத்தையும் கடந்து ஓர் இதமான மெல்லிசை மக்களைத் தன்வயப்படுத்துகிறது.
60 வயதுகளில் இருக்கும் அந்த பெரியவர் ஏரிக்கு அருகே அமர்ந்து தம்புரா போன்ற நீண்ட இசைக் கருவியில் நாட்டுப்புறப் பாடல்களை இசைக்கிறார். கண்களை மூடியபடி ஒரு கையால் கம்பிகளை இசைத்தபடி மற்றொரு கையை குறுகலான இசைப்பலகையில் நகர்த்துகிறார். அவரைச் சுற்றி திரண்டுள்ள சிலருக்கு அவரது இசைக் கருவியை பற்றியோ, மெல்லிசை பற்றியோ, திரிபுராவின் பழங்குடியினமான மாலி சமூகத்தைச் சேர்ந்த இக்கலைஞரின் பெயரோ தெரியாது.
அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமமான சரளாவில் (கடம்டலா தாலுகாவிற்குள் வருகிறது) தோதாரா கலைஞர் ரதிஷ் மலாகர் என்பதை அனைவரும் அறிவர்.













