பழைய நகரத்தில் எவரிடமும் ஹைதராபாதி லாக் வளையல்கள் செய்யுமிடம் கேட்டுப் பாருங்கள். லாட் பஜாரிலுள்ள ஒஸ்மான் கடைக்கு வழி சொல்வார்கள். பிரபலமான அக்கைவினை கடைக்கு பெயர் இல்லை. லேசாக துரு பிடித்த ஷட்டரை திறந்தால் மூன்று சுவர் கொண்ட அறை வெளிப்படும். குறைந்த உயரம் கொண்ட ஓர் உலோக மேஜைக்கு இரு பக்கங்களிலும் ஷைஜ் அகீல் மற்றும் ஷைக் ஹஜீல் அமர்ந்திருக்கின்றனர்.
அந்த சகோதரர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர். தனியாக ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். பல கட்டங்களில் இருக்கும் லாக் வளையல்கள் சுற்றி கிடக்கின்றன. “பிங்க்தான் பிரபலமான நிறம்,” என்றபடி அடர் பிங்க் நிறம் பூசப்பட்ட லாக்கை எடுக்கிறார். பிங்கை தாண்டி கறுப்பு, தங்க நிறம், பசியநீலம் ஆகிய வண்ணங்கள் இந்த வளையல்களின் நிறங்களாக பிரபலமாக இருக்கின்றன. இந்த வளையல்கள் பளபளப்பான மணிகளுடன் இணைக்கப்பட்டு செல்லோஃபேன் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
சார்மினார் அருகே உள்ள லாட் பஜாரின் குறுகலான தெருக்களில் இருக்கும் பட்டறையும் கடையுமான இப்பகுதிக்குள் பழைய மரம் மற்றும் பித்தளை மணம் நிரம்பியிருக்கிறது. பக்கத்து மசூதியின் தொழுகை அழைப்பு சத்தமும் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சத்தமும், அகீல் மற்றும் ஹஜீல் வேலை பார்க்க தொடங்கியதும் மங்கத் தொடங்குகிறது. முப்பது வயதுகளில் இருக்கும் அந்த சகோதரர்கள் இந்த வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். அமைதியாக இக்கலையில் மூழ்கி வேலை செய்யவே விரும்புகிறார்கள்.
ஒஸ்மான் என்கிற உறவினரின் பெயர்தான் கடைக்கு சூட்டப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். “கடை அவருக்கு சொந்தமானது. ஆனால் அவர் இங்கு வேலை பார்க்கவில்லை. என்னுடைய சகோதரனும் நானும்தான் வேலை பார்க்கிறோம்,” என்னும் அகீல், தாங்கள் வாடகை கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார்.














