சீதா சசானி தன் கணவரை பார்த்தபோது அவரது மதிய உணவு இடைவேளை கொடுங்கனவாக மாறி இருந்தது.
அவரது கண் முன்னே, கணவர் கேசவ்வின் முகம் ஒருபக்கமாக இழுத்துக் கொண்டது. அருகில் ஓடிச் சென்று பார்த்தபோது, கணவர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்திருந்தார்.
“நான் அவர் பெயரைச் சொல்லி சத்தமாக அழைத்தபோதும், அவரிடம் பதிலில்லை,” என்று ஓராண்டிற்கு பிறகு சீதா நினைவு கூர்ந்தார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம் அஹர்வஹிகான் கிராமத்தில் உள்ள அவரது ஒற்றை அறை குடிசையில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.
கோலாப்பூரில் உள்ள சர்க்கரை ஆலையில் கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றுவதை அந்த தம்பதியினர் காலை முழுவதும் செய்தனர். மேற்கு மகாராஷ்டிராவில் உள்ளே அதே தோட்டத்தில் அவர்களின் இரண்டு மகன்களும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
முதுகெலும்பை உடைக்கும் இந்த கடுமையான வேலை அதிகாலை தொடங்கி மாலை வரை தொடரும். மதியம் மட்டும் அரை மணி நேரம் உணவு இடைவேளை. 45 வயதாகும் சீதா கரும்பு தோட்டத்தில் உள்ள தங்களின் தற்காலிக குடிசையில் காலையில் சமைத்த உணவை ஒரு விரிப்பில் எடுத்து வைக்கிறார். நான்கு தட்டுகளை வைத்துவிட்டு அதில் ஒன்றை எடுத்து 55 வயதாகும் கேசவ்விடம் கொடுத்தபோது அவர் சரிந்து கிடந்தார். அவரது முகமும் ஒருபக்கமாக இழுத்துக் கொண்டது.
“நான் பதற்றமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்,” என்று சீதா 2023 அக்டோபரின் கொடுமையான மதிய வேளையை நினைவுகூர்ந்தார்.
மருத்துவர் உடனடியாக அது பக்கவாதம் என்பதை கண்டறிந்தார். கேசவ்வை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது.
அவர்களால் கரும்பு தோட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. வறுமையில் வாடும் மற்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே, அவர்களும் ஆறு மாத கால அறுவடைப் பருவத்தில் கரும்பு வெட்டி ஏற்றுவதற்கு முன்பணமாக ரூ.1.5 லட்சம் முன்பணமாகப் பெற்றிருந்தனர்.
“நாங்கள் திரும்பிச் செல்ல எங்களுக்கு வேலை கொடுத்த ஒப்பந்தக்காரர் விடவில்லை,” என்கிறார் தலித் சமூகத்தைச் சேர்ந்த சீதா. ஒப்பந்தக்காரரிடம் சண்டையிட்டோ, கெஞ்சியோ பார்த்தும் அவர் மசியவில்லை. அவருடைய இரண்டு மகன்களான 23 வயது சவுரபும், 21 வயது சூரஜூம் இந்த வேலையை தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவரது கணவர் கேசவ் கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவர்களின் தற்காலிக குடிசையில் படுக்கையில் கிடந்தார்.












