நவீன் குமார் தாம்தாவுக்கு, தன்னை பார்வையிட வருபவர்கள், தான் வேலை செய்வதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்ள அனுமதி கேட்பது பழகிவிட்டது. ஐம்பது வயதைக் கடந்த அவர் ஒரு புகழ்பெற்ற செப்புக்கொல்லர் - உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில், செம்பு உலோகத்தில் கலைப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை நேர்த்தியாக வடிவமைக்கிறார்.
தாம்தா, பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து இமயமலையின் குமாவோன் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படும், செப்புக் கொல்லர்களின் வம்சாவளியில் வந்தவர். அவர்கள் முதன் முதலில் லோஹாகாட்டில் உள்ள கோஸ்னி கிராமம் அருகில் குடியேறினர். பின்னர், சம்பாவத்திலிருந்து அல்மோராவாக தலைநகரம் மாற்றப்பட்டதும், சில குடும்பங்கள் இங்கு குடிபெயர்ந்தன.
நெடுங்காலமாக, செப்புக் கொல்லர்களின் வேலை, அவர்களின் பரம்பரைத் தொழிலாகவே இருந்தது. "எல்லோரும் கேலி செய்வர். போட்டியும் இருந்தது. போட்டி மனப்பான்மையில் அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர்," என்கிறார் கைவினைஞர் பிரதீப் தாம்தா.
பெண்கள், இந்த தொழிலில் ஒரு முக்கிய பங்காற்றினர். அவர்கள் அருகிலுள்ள காடுகளிலிருந்து உலைக்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பர், வடிவமைக்கபட்ட பொருட்களை மெருகூட்டுவர். உலை விசிறியைச் சுழற்றுவர், வெல்டிங்கிற்குப் பொடி தயாரிப்பர். சமைப்பதற்கும், குடும்பங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் இடையில் பல பெண்கள் வடிவமைப்பு மற்றும் உலோகத் தாளை சுத்தியலால் அடிப்பதற்கு முன் சூடாக்குவது போன்ற பிற நுணுக்கமான பணிகளையும் மேற்கொண்டனர்.































