வட கேரளாவின் கோழிகோட்டில் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த இரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பெரியவருக்கு அது ஒரு விஷயமே இல்லை. சிறிய துணிக்கூடாரத்தின் கீழ் அவர் உறங்குகிறார். பகல் பொழுதுகளில் பழங்குடியின குடும்பங்களின் போராட்டங்களில் அவரும் அமர்ந்திருப்பதை நம்மால் காண முடியும். கிட்டதட்ட 70 நாட்களாக நிலம்பூரைச் சேர்ந்த 60 பழங்குடியின குடும்பங்கள், அரசு உறுதியளித்தபடி நிலத்தை அளிக்க கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து, முதுகெலும்பாக இருக்கும் 96 வயது `குரோ’ வாசு என்கிற அயினூர் வாசுவின் பங்களிப்பு அளப்பரியது. உடல் பலவீனமடைந்து குரல் மென்மையாகியிருந்தாலும் அவரது போராட்ட குணத்தில் உறுதியாக இருக்கிறார். இந்த வயோதிகத்தில் மவுனமாக, ஓய்வாக நேரத்தைக் கழிக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாசு தனது முழு சக்தியை ஏழைகளுக்காக செலவிடுகிறார். “இக்குடும்பங்களை [பழங்குடியினர்] அரசு நுட்பமாக ஏமாற்றி வருகிறது,” என்கிறார். சுருக்கம் விழுந்த கண்களில் கோபம் தெறிக்கிறது. “நிலம் அவர்களின் உரிமை, தானமாக கொடுப்பது அல்ல.“
இது, 2023-24 கால கட்டத்தில் ITDP (ஒருங்கிணைந்த பழங்குடியின வளர்ச்சித் திட்டம்) அலுவலகம் முன்பு நிலம்பூர் குடும்பங்கள் 314 நாட்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.
ஆறு மாதங்களுக்குள் 60 குடும்பங்களுக்கும் தலா 50 சென்ட் நிலம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 15 மாதங்கள் ஆகியும் அரசின் உத்தரவாதங்கள் சாக்குபோக்காக மாறியதால் இக்குடும்பங்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்டத்தை தொடங்கினர். ஒரு காலத்தில் ஆபத்தான நக்சலாக முத்திரை குத்தப்பட்ட `குரோ’ வாசு பெரும்பாலான இரவுகளை இந்த போராட்ட பந்தலில் செலவிட்டு வருகிறார்.
அண்மைக் காலங்களில் அரசுடன் அவர் முரண்படுவது இது முதல்முறை கிடையாது. 2023-ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக இரண்டு மாதங்கள் அவர் சிறையில் கழித்தார். 2016-ஆம் ஆண்டு நிலம்பூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் கொப்பம் தேவராஜன், அஜிதா ஆகியோர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டி நீதி கேட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார் என அவர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்ட பிறகு அவர் பிணை கோர மறுத்துவிட்டார். சிறைவாசம் அவரை தளரச் செய்யவில்லை. மாறாக அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக கூர்தீட்டியுள்ளது.








