புலிட்சர் மையத்தின் ஆதரவு பெற்ற பார்த் எம்.என் எழுதும் தொடரின் பகுதி இக்கட்டுரை.
கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் கடன், மொஹாட்டோவின் மொத்த கிராமத்துக்கும் மே 2025-ன் முதல் வாரத்தில் விருந்து வைப்பதிலிருந்து கெரு தஹிஃபாலேவை தடுக்கவில்லை. தகரக் கூரை வேயப்பட்டிருந்த வீட்டுக்கு முன்பு இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் வந்து, பெரும் சைவ விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
செலவு ரூ.1.5 லட்சம்.
70 வயது தகிஃபாலேவிடம் அந்த அளவுக்கு பணம் கிடையாது. எனவே 3 சதவிகித மாத வட்டிக்கு அவர் கடன் வாங்கினார். பொய்த்துப் போன குளிர்கால விளைச்சலையும் தாண்டி அவர் வாங்கிய அந்த கடன் அவர் கழுத்தை நிச்சயம் நெறிக்கவல்லது. வெங்காயங்களை விதைத்திருந்தார். ஆனால் பஞ்சத்தால் பயிர் கருகி, அவரது 35,000 ரூபாய் முதலீடை இல்லாமல் ஆக்கி விட்டது.
வாழ்க்கையை ஓட்டுவதே பிரச்சினையாக இருக்கும் நிலையில் கூட, இத்தகைய விருந்தை நடத்த அவர் சற்றும் தயங்கவில்லை. “இல்லையெனில், தெய்வம் என்னை ஆசிர்வதிக்காது. விருப்பங்களையும் நிறைவேற்றாது,” என்கிறார் அவர்.
மொகாதே கிராமம், அகிலியாநகரின் (முன்பு அகமது நகர்) பதார்டி தாலுகாவில் இருக்கிறது. தகிஃபாலேவின் வீடு, பிரபல மொகாதா தேவி கோவிலில் இருந்து வரும் சாலையின் வளைவில் அமைந்திருக்கிறது. பிரம்மாண்டமான நான்கு தளக் கட்டடத்துடன் 2009 முதல் 2013 வரை புதுப்பிக்கப்பட்ட கோவில் அது. அதற்கு ஆன செலவு ரூ.20 கோடி. மகாராஷ்டிராவில் பிரபல இந்து புனிதத் தலமாக விளங்கும் அக்கோவிலுக்கு வருடத்துக்கு 25 லட்சம் பேர் வருகிறார்கள்.













