2026 ம் ஆண்டு, ஒரு மே மாத ஞாயிற்றுக்கிழமையில், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மத்துவா சமூகத்தின் ஆன்மீகத் தலமான தாகூர்பாரியில் மக்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கோவிலில் பிரார்த்தனை செய்ய வரவில்லை. மாறாக, தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைப் பெற கடும் வெயிலில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) போது நிகழ்ந்த 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர் நீக்கங்களில், இவர்களுடைய பெயர்களும் நீக்கப்பட்டன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
மத்துவாக்கள் ஆதிக்கம் செலுத்தும் 15 சட்டமன்றத் தொகுதிகளில், இந்துப் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டன.
தாகூர்பாரியில் கூடியுள்ள கூட்டத்தில் லலிதா தாலியும் ஒருவர். அவர் தனது கணவர் கார்த்திக்குடன் இந்து அட்டை பெறுவதற்காக காத்திருக்கிறார். கபிலாஷ்பூரைச் சேர்ந்த 43 வயதான இவர், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவை ஸ்கூட்டியில் கடந்து வந்துள்ளார். இவரது பெயர் இறுதி எஸ்ஐஆர் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் கார்த்திக்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
லலிதாவின் தாத்தாவும், தந்தையும் 1950-களில் இந்தியாவிற்கு வந்து, 1984-ல் வங்காள தேசத்திற்கு திரும்பினர். சில ஆண்டுகளில் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு வந்தனர். “ஓர் பாபா எபர் ஓபர் கோர்தோ. கே ஜேன் கோன் பரே ஜோன்மேச்சே ["அவருடைய அப்பா அடிக்கடி இந்தியாவிற்குச் சென்று திரும்புவார். அவர் எங்கு பிறந்தார் என்று யாருக்குத் தெரியும்]" என்கிறார் 53 வயதான கார்த்திக்.
மத்துவாக்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பிராமண எதிர்ப்புப் பிரிவினர் ஆவர். "பிரிக்கப்படாத வங்காளத்தின் கிழக்குப் பகுதியில், ஹரிசந்த் தாக்கூர் தாழ்த்தப்பட்ட சாதியினரை, குறிப்பாக நாமசூத்திரர்களைத் திரட்டியபோது உருவானவர்கள் அவர்கள். பல மத்துவாக்கள் இக்கட்டான சூழலில் மேற்கு வங்காளத்திற்குக் குடிபெயர்ந்தனர். அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை. "பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான்/வங்காளதேசத்தில் நாமசூத்திரர்கள் (பட்டியல் சாதியினர்) மதரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளானார்கள்," என்று அயன் குஹா சுட்டிக்காட்டுகிறார். இங்கிலாந்தின் ஸஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் குஹா, மேற்கு வங்காளத்தில், சாதியின் அரசியல் இயக்கவியல் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார்.












