பெரும்பான்மை இந்தியர்களுக்கு 14 அங்குல கருப்பு - வெள்ளை டிவி என்பது கடந்த கால நினைவுச்சின்னமாக இருக்கலாம். ஆனால் ராவ்ஜி நரோட்டிக்கும் அவரது மகன் துளசிராமிற்கும் இது பெருமைக்குரிய விஷயம். அவர்களது செங்கல்- மண் வீட்டின் ஒரு மூலையில் சோலார் விளக்குடன் டிவியும் இடம்பெற்றுள்ளது.
ரூ.4000 மதிப்பிலான ஆடம்பர பொருள் ஒன்றை முதன்முதலில் தங்கள் வீட்டிற்கு வாங்கி கடந்த மாதம் முதன்முறையாக மின்சாதன உலகிற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். அவர்களின் அண்டை வீட்டு இளைஞர் சாது இச்சாமியும் அருகாமை நகரிலிருந்து ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
சுதந்திரம் அடைந்து ஆறு தசாப்தங்களுக்கு பிறகு நரோட்டி வசிக்கும் கரஞ்சி கிராமத்தில் முதன்முறையாக ஜூலை 14ஆம் தேதி மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த கச்சிரோலி மாவட்ட தலைநகரின் 80 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் உள்ள இக்கிராமத்தில் 48 கோந்து பழங்குடியின குடும்பங்களும், இரண்டு வங்கதேச அகதிகள் குடும்பங்களும் வாழுகின்றன.
முதல் தெருவிளக்கு உயிர்பெற்று, பசுமையான நெல் வயல்களிலிருந்து வரிசையாக உள்ள குடிசைகளுக்கு நடுவே மண் சாலையை ஒளிரச் செய்தபோது, கிராமவாசிகள் கொண்டாடி தீர்த்தனர். அவர்கள் ஆட்டுக்குட்டியை வெட்டி சமூக விருந்துக்கு ஏற்பாடு செய்து, தங்கள் வீடுகளை அலங்கரித்து, வருகை தந்த அரசு அதிகாரிகளை "ரேலா" நாட்டுப்புற நடனத்துடன் வரவேற்றனர்.
ஐயஹோ, கொண்டாட்டம் சிறிது காலமே நீடித்தது. எனினும் வாழ்வின் மீதான நம்பிக்கை அவர்களிடம் ஒளிர்கிறது.
ஜூலை 16 ஆம் தேதி பெய்த கனமழையால் புதிதாக அமைக்கப்பட்ட, ஒற்றை-கட்ட 11 கிலோவோல்ட் மின்பாதை துண்டிக்கப்பட்டது என்று கரஞ்ஜியிலிருந்து 45 கி.மீ தொலைவில் சமோர்ஷியில் உள்ள மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்தின் (MSEDCL) உதவி பொறியாளர் திலீப் கும்பரே வருத்தப்பட்டார். மின்கம்பி மீது மரம் விழுந்ததில் 2 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
“ஜூன் 9 முதலே ஓயாத மழை,” என்கிறார் சமோர்ஷி துணைப்பிரிவு அலுவலர் திலிப் சவர்கார்.
மழை குறைந்த பிறகு தான் மின் இணைப்பு சரிசெய்யப்படும், என்றார் கும்பரே. “பழுது பார்க்க எனக்கு வெயில் தேவை.”
கிராமவாசிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அவர்கள் தொலைக்காட்சியில் விசிடி திரைப்படங்கள் காண விரும்புகின்றனர்.
நரோட்டி, இச்சாமி வீடுகள் தான் இதற்கு தொடக்கப் புள்ளி. மற்றவர்கள் அவர்களை பின்பற்றுவார்கள். இதுவரை 36 வீடுகள் சொந்த பயன்பாட்டிற்கு மின் இணைப்புக் கோரி MSEDCL-ல் டெபாசிட் செலுத்தியுள்ளன.
“கிராமவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது,” என்றார் கும்பரே. “ஒரு வாரத்திற்குள் நாங்கள் மீட்டர் நிறுவிடுவோம்.”
“அடுத்த ஆண்டு எல்லோர் வீட்டிலும் நீங்கள் டிவிப் பெட்டியை காணலாம்,” என்றார் இளைஞர் துகாராம் கங்கலி.
இது எளிதான வேலை கிடையாது
சத்தீஸ்கரின் கச்சிரோலி மற்றும் அருகிலுள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடி கிராமங்ளில் மின்இணைப்பு கிடையாது. இது இந்தியாவுடன் தொடர்பற்ற மற்றொரு பகுதியை பிரதிபலிக்கிறது. ஒருபுறம் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, மாவோயிஸ்டுகளை உளவு பார்க்க ஆளில்லா வான்வழி வாகனங்களை இந்தியா அனுப்புகிறது.
கிராமங்களில் மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகமும், MSEDCLம் இப்போது கைகோர்த்துள்ளன. ஆனால் அதிலும் சிரமங்கள் உள்ளன.
முதலாவது: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பெரும்பாலான கிராமங்கள் சிதறி கிடக்கின்றன. குறைந்த மக்கள் தொகையுடன் வறுமையில் உள்ளதால் அவர்களால் மின் கட்டணத்திற்கு பணம் செலுத்த முடியாது. கட்டணங்கள் உயரும் நேரத்திலும் அவர்களுக்கு மலிவான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது: காடுகள், கடினமான நிலபரப்புகளில் மின் இணைப்புகளை அமைப்பதற்கு பெரும் முதலீடு மட்டுமின்றி ஏராளமான அனுமதிகள் தேவைப்படும். உள்கட்டமைப்பிற்கு வனத்துறையின் அனுமதி தேவைப்படுவதால் அதுவும் எளிதில் கிடைப்பதில்லை.
மூன்றாவது: மின்சார வசதி இல்லாத பெரும்பாலான கிராமங்கள் கிட்டத்தட்ட நுழைய முடியாத மாவோயிஸ்டுகளின் கோட்டையாக உள்ளன. அங்கு கடந்த சில ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமாக உள்ளன.
நான்காவது: MSEDCL வசம் கச்சிரோலியில் போதிய ஊழியர்கள் கிடையாது. பல ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பையும் அது செய்யவில்லை. இருக்கும் ஊழியர்களும் இந்த பின்தங்கிய மாவட்டத்தில் பணியாற்ற தயங்குகிறார்கள்), தடையில்லா மின்சார விநியோகத்தை வழங்குவது வயதான ஊழியர்ளுக்கு சவாலாகிறது.
முரண்பாடுகள் பல இருந்தாலும், பணியை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகம் கூறுகிறது.
“சொந்த மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியாதது அவமானம்,” என்கிறார் மாவட்ட ஆட்சியர் அபிஷேக் கிருஷ்ணா. ”அவர்கள் ஒருபோதும் புகார் கூறியதில்லை. ஏனெனில் அவர்களால் எங்களை தொடர்பு கொள்ள முடியாது.“
2012 மத்தியில், மாவட்ட நிர்வாகமும், MSEDCL கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில், மின் விநியோகமற்ற கிராமங்களை இரண்டு வகைகளாக பிரித்தனர்: மின்சாரத்தை கண்டிராதவை. இரண்டு தசாப்தங்களுக்கு முன் இணைப்புப் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டவர்கள்.
“கச்சிரோலி மாவட்டத்தில் 1600 கிராமங்களில் 300ல் மின்சாரம் இல்லை,” என்றார் கிருஷ்ணா. அவற்றில் பல கிராமங்களில் அனைத்து பருவத்திற்கும் ஏற்ற சாலைகள் கூட கிடையாது.
கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.11 கோடி செலவாகும். இந்தாண்டு முதல் ஏழு மாதங்களில், 100 கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதி உள்ள குடும்பங்கள் சொந்த பயன்பாட்டிற்கு மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.




