துர்கா மற்றும் நாராயணசுவாமியின் 'கங்கம்மா நீர்நகா ஜாடே ஹெனிடவ்லே' நாடகம் முடிவடைந்திருந்த மாலை நேரம் அது. கோடிகனஹள்ளி ராமையாவின் இந்தக் கன்னட நாடகம், நிலம் மற்றும் நீர் மீதான அரசியலமைப்பு உரிமைகளைப் பற்றியது. தீண்டாமை குறித்த கவனத்தை ஈர்க்கும் படைப்பாக மாநிலம் முழுவதும் இந்த நாடகம் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது.
நாடக இசையின் கடைசி ஸ்வரங்கள் ஓயும்போது, அவர்களின் தெரு மேடையில் பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படத்தை வைக்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கர், ஒரு அறிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடிய சமத்துவத்தின் ஆதரவாளர் ஆவார்.
அம்பேத்கரின் புகைப்படம் எடுத்து வரப்பட்டவுடன், அந்தச் சிறிய கர்நாடகா கிராம மக்களின் மனநிலை உடனடியாக மாறுகிறது.
"அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்ததும், மக்கள் எங்கள் சாதியை யூகிக்கிறார்கள். எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள். எங்களை திண்ணையில் உட்கார வேண்டாம் என்று சொல்கிறார்கள். சில கிராமங்களில், ஏற்பாட்டாளர்கள் எங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடுகிறார்கள்," என்கிறார் நாராயணசுவாமி.
"உன் பெற்றோரும் குடும்பத்தினரும், உன்னை இப்படி நடிக்க அனுமதிக்கிறார்களா?" என்ற கேள்வி உட்பட 31 வயது துர்காவிடம் வயது, திருமண விவரங்கள் உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படுகிறது.



























