காட்டிலே கடவுக்கு முதல் வாடிக்கையாளர் வருவதற்கு முன்பே காட்டுக்குள் நாள் புலர்ந்துவிட்டது.
வெளிச்சம் வந்தவுடனே சசிகுமாரி கனி மற்றும் பிற பெண்கள் திருவனந்தபுரத்தில் இருக்கும் விதுரா-பெப்பரா அணை சாலையில் இருந்து காடுகளுக்குள் நடக்கத் தொடங்கிவிட்டனர். மேற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியான இப்பகுதியில் சாலை, பெப்பாரா நீர்த்தேக்கத்தையும் பழங்குடி வசிப்பிடங்களையும் சுற்றி செல்கிறது. சமையல் எரிபொருள் இங்கு வந்து சேருவதில்லை. சேகரிக்கப்படுகிறது.
தலைகளில் விறகுகளை சுமந்து வீடு திரும்புவார்கள். அப்போதுதான் சமையலறை திறக்கும். ’காட்டிலே கட’ என்றால் காட்டில் கடை என அர்த்தம்.
சாலையோர் உணவகத்தில் புகை எழும்புகிறது. பயன்படுத்தப்படாத ஒரு எரிவாயு சிலிண்டர் ஒரு மூலையில் இருக்கிறது. சிலிண்டர் நிரப்புவது அடிக்கடி நடப்பதில்லை. விலை உயர்ந்துவிட்டது. கிடைப்பதும் உறுதியல்ல.
“எரிவாயு சிலிண்டரை இனி சார்ந்திருக்க முடியாது,” என்கிறார் 49 வயது சசிகுமாரி. “எனவே மீண்டும் நாங்கள் விறகுகளுக்கு சென்றுவிட்டோம்.”
கேரளாவின் சிறு உணவகங்கள் யாவும், அமெரிக்கா-இஸ்ரேல் போரால் ஏற்பட்டிருக்கும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடால் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றன. காலதாமதமும் அதிக விலைகளும் பலரை விறகு அடுப்புக்கு திரும்ப அனுப்புகிறது.
காட்டிலே கடாவின், மொத்த நாளையும் இந்த மாற்றம் மாற்றி அமைத்திருக்கிறது.
58 வயது கணவரான மணியனுக்கு உடல்நலம் குன்றிய பிறகு, நான்கு வருடங்களுக்கு முன் சசிகுமாரி இந்த உணவகத்தை தொடங்கினார். தென்மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகளில் வசிக்கும் கனி என்ற பழங்குடி சமூகத்தை சார்ந்த சசிகுமாரி, தனக்கு பரிச்சயமான விஷயத்தை நோக்கி கவனத்தை திருப்பினார். நிலம் உருவாக்கும் உணவுதான் அவரின் கவனமாக இருந்தது.
ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு திட்டத்தின் ஆதரவிலும் குடும்பஸ்ரீ கடன்களையும் கொண்டு, பெண்கள் ஒரு சிறிய சாலையோர சமையலறையை வருமானத்துக்காக கட்டினர். கோவிட் பொது முடக்கக் காலத்தில் குடும்பஸ்ரீ உணவகங்கள் பலரின் வாழ்க்கைக்கு உதவின.






