ஜனாபி சொனாவனே நெருங்கிய நண்பர்களுடன் எப்போதும் வாதிட்டதும் இல்லை. சச்சரவு கொண்டதும் இல்லை.
ஆனால் இந்த வருடம் நிலை மாறிவிட்டது. “வேகமாக எரிச்சலடைந்து, சிறு விஷயங்களுக்கெல்லாம் நண்பர்களுடன் சண்டை தொடங்கி விடுகிறேன்,” என்கிறார் 62 வயதாகும் அவர், மகாராஷ்டிராவின் பதோலே கிராமத்திலுள்ள ஈரறை வீட்டுக்கு வெளியே அமர்ந்து.
2025ம் ஆண்டின் கோடைக்கால இரவுகளின் வெப்பநிலை குறிப்பிடத் தகுந்த அளவில் கொல்ஹாப்பூரில் அதிகரித்திருக்கிறது. தூங்க முடியாமல் ஜனாபாய் தவிக்கிறார். முதலில், இந்த சிரமம் ஓரிரு நாட்களில் மறைந்து விடும் என நினைத்தார். ஆனால், மூன்று மணி நேரம் கூட தூங்க முடியாத நாட்கள் அவருக்கு நேர்ந்தன. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகின. தொடர் எரிச்சலும் சோர்வும் அவரை பீடித்தது.
நிலமற்ற விவசாயியான ஜனாபாய் நாளில் எட்டு மணி நேரங்கள் பிறரின் வயல்களில் முதுகொடிய வேலை பார்க்கிறார். களைகள் எடுக்கிறார், கனமான தீவனத்தை தூக்கிறார், அறுவடை செய்கிறார். மாலையில் சோர்வாகிறார். தோள்கல் வலி கொள்கின்றன. கால்கள் கனமாகின்றன. நாளின் முடிவில் வழக்கமாக அவர் 10 மணிக்கு வீட்டு வாசலருகே உறங்க செல்வார். சில நிமிடங்களில் தூங்கி விடுவார்.
ஆனால் ஆழமான நிம்மதியான அந்த தூக்கம் இப்போது தூரக் கனவாகி விட்டது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் அதிகரித்திருக்கும் தட்பவெப்பமும் குறைவான ஈரப்பதமும், இரவு முழுக்க அவருக்கு வியர்வையை வரவழைக்கிறது. அல்லாடும் அவர் ஓய்வெடுக்க முடியாமல் தகர வீட்டுக்குள் ஏறும் சூடினால் உறக்கம் கலைந்து அடிக்கடி விழிக்கிறார்.
விழிப்பு வந்த பிறகு, மீண்டும் தூங்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் பிடிக்கிறது.












