கர்பாரி ராம்ராவ் ஜாதவின் கிணறு தோண்டுவதற்கான விண்ணப்பம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அவர் ரூ.2.99 லட்சம் மானியம் பெறவிருந்தார். அதற்கு பதிலாக, "நான் அந்தப் பணத்தைப் பெறவும் இல்லை. நானாக கிணத்தை தோண்ட முயற்சித்ததில், ரூ. 1.5 லட்சம் அளவுக்கு கடன் ஆகியுள்ளது," என்கிறார்.
48 வயதான ஜாதவ், அவுரங்காபாத்தின் புலம்ப்ரி தாலுகா, கனோரி கிராமத்தில் வசிக்கிறார். அங்கு அவர் நான்கு ஏக்கரில் பருத்தி மற்றும் கம்பு பயிரிடுகிறார். இதற்காக அருகிலுள்ள மலைகளிலிருந்து பாயும் ஓடையில் இருந்து தண்ணீர் எடுக்கிறார். ஆனால் மராத்வாடா பகுதியில் வறட்சி பொதுவானது. எனவே சொந்தமாக கிணறு இருந்தால், விவசாய நிலத்தையும் கால்நடைகளையும் எளிதாக பராமரிக்க முடியும் என்று ஜாதவ் நம்பினார்.
அதற்காக, 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒரு விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தார். அதற்கு அவரது நிலம் தொடர்பான கட்டாய ஆவணங்கள் பலவும் தேவைப்பட்டன. ஆவணங்களைப் பெறுவதற்கு, ஜாதவ் பல்வேறு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. தலாதி (கிராம கணக்காளர்), கிராம பஞ்சாயத்து (கிராம சபை) மற்றும் பஞ்சாயத்து சமிதி (கிராம பஞ்சாயத்துக்கும் ஜில்லா பரிஷத் அல்லது மாவட்ட வாரியத்திற்கும் இடையிலான ஒரு இடைத்தரகர் அமைப்பு) அலுவலகங்கள் இதில் அடங்கும். இதற்கிடையில், ஆவணங்களைப் பெறவும், ஜில்லா பரிஷத்திலிருந்து பணி உத்தரவைப் பெறுவதற்கும், அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டது. "ஒரு சாதாரண விவசாயி நிர்வாகத்தை எப்படி எதிர்க்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.

