பிகாரில் உள்ள எங்கள் ஊரான பர்ரி புல்வாரியாவிலிருந்து ஒரு மணி நேர தூரத்தில் பவானிபூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்த ஒரு பெண் எங்கள் ஊரின் பகுதிகளில் கறியை மூங்கில் கூடையில் தலையில் வைத்துக் கொண்டு வருவார். அவருக்கு வெற்றிலை பிடிக்கும் என்பதால் அவரை பான்வாலி என அழைத்தோம். இது 1979ம் ஆண்டில்.
அச்சமயம் பஞ்சம் இருந்த காலம். சிலர் மட்டும்தான் மீன் மற்றும் கறி வாங்க முடியும். இரு மாதங்களுக்கு ஒருமுறை பான்வாலி வருகையில் எங்களுக்கு ஈத் போல இருக்கும். கோஸ் லே லோ கோஸ் (கறி வாங்குங்கள், கறி வாங்குங்கள்).
குழந்தையாக இருந்தபோது கறி பிடிக்கும் என்பதால் என் தாத்தா அப்துல் ஹக்கீம் என்னை சீண்டி,”ஜப் படா ஹொகா, தேரி ஷாதி பான்வாலி கி பேட்டி சே கரா துங்கா (நீ வளர்ந்துவிட்டாய். உன்னை பான்வாலியின் மகளுக்கு மணம் முடித்து கொடுத்து விடுகிறேன்).
எங்கள் ஊரில் இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மை. பவானிபூரிலிருந்து புல்வாரியா வரை இரண்டு சாலைகள் மட்டும்தான். ஒன்று நர்ஹார்பூர் வழியாக செல்லும். இன்னொன்று பசால் வழியாக செல்லும். இரண்டிலும் இந்துக்களும் இஸ்லாமியர்கள் கலந்து இருந்தனர். பிறகு அத்வாரா என்ற ஓர் ஆறும் இருந்தது. அதை கடந்துதான் பான்வாலி எங்கள் ஊருக்கு வர வேண்டும்.
எங்களின் ஊரிலிருந்து அவர், இந்து பெரும்பான்மை வாழும் பர்ரி மற்றும் பஜித்பூர் வழியாக கஞ்சன்பூருக்கு சென்று மிச்ச கறி விற்பார்.
இன்று நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இப்பெண் தலையில் கறிக்கூடை சுமந்து வீடு வீடாக சென்றதை எவரும் தடுத்ததில்லை. யாரும் எந்த ஆபத்தும் அவருக்கு ஏற்படுத்தியதில்லை. எங்கள் ஊர் இந்துக்கள் பன்றிக்கறி சாப்பிட்டு மது அருந்தி அமர்ந்திருப்பதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அதேபோல இஸ்லாமியர்கள் கறி சாப்பிடுவதில் இந்துக்களுக்கும் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை.
இன்று பான்வாலி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை. ஆனால் அந்த காலம் இன்று இல்லை. பவானிபூருக்கும் புல்வாரியாவுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.