ரோஜா இதழ்களோ, இலையின் நரம்புகளோ இர்ஷாத் உசேன் எல்லாவற்றையும் உலோகத்தில் பொறிக்க வல்லவர். கலைஞரான அவரது சியா கலம் கலை, உத்தரப்பிரதேசத்தின் பித்தளை நகர் என போற்றப்படும் மொராதாபாதில் செய்யப்படுகிறது.
பீர்ஜதாவிலுள்ள பட்டறையில் அவரை சுற்றி, அவர் பொறித்த பொருட்கள் கிடக்கின்றன. மயில்கள், எண்ணெய் விளக்குகள், ஸ்வஸ்திகா அலங்கரிக்கப்பட்ட கோப்பைகள், பிரார்த்தனை மணிகள், சிங்கத் தலை கொண்ட வாள் போன்றவை அங்கு கிடக்கின்றன.
நீண்ட பாரம்பரியம் கொண்ட சியா கலம் கலைஞர்களின் வழியில் வந்தவர் உசேன். 10 வயதில் பணிபுரியத் தொடங்கினார். அவர் பொறிக்கும் விளக்கு, ஒரு சிறு மர மேஜையில், இரண்டு கற்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருக்கிறது. விளக்குடன் கட்டப்பட்டிருக்கும் நூல், மேஜைக்கு கீழ் செல்கிறது. அதை வலது பாதத்தில் அவர் பிடித்திருக்கிறார். பேனா வடிவத்திலான உளி மீதுள்ள மரக் குச்சியை உசேன் அடித்ததும், உலோகத்தில் நுட்பமான வடிவம் உருவாகிறது.
“தனிப்பட்ட பரிசுகளுக்கென வாடிக்கையாளர்கள் தனித்துவமான வடிவங்களை கேட்பார்கள். இந்தி, உருது, ஆங்கிலம், குரானிய வசனங்கள், சுவர் படங்கள் போன்றவை கேட்பார்கள். அவர்கள் விரும்புவார்கள் என்பதற்காக பூக்களை கொண்டு அலங்கரிப்பேன்,” என்கிறார் அவர். “ரோஜாக்களுடனான பரிசுகள்தாம் எனக்கு பிடித்தவை.”
பிற கலைஞர்களுடன் பகிர்ந்து செயல்படும் 10 அடி அறையின் வாசலில் அவர் அமர்ந்திருக்கிறார். “கற்கும்போது ஒரு கலையை கற்பது போல இருந்தது,” என்கிறார் அவர் தொடக்க நாட்களை நினைவுகூர்ந்து. “இப்போது இது வேலையாக இருக்கிறது.”




















