“வாங்க, வாங்க! உட்காருங்க,” என்று 45 வயதான நந்து பால், வெள்ளை செம்மறியாட்டு கம்பளியை தரையில் விரித்து, உட்கார அழைக்கிறார். நந்து பால், பாரம்பரியமாக செம்மறி ஆடு வளர்ப்பதற்கு பெயர் பெற்றவர். மாநிலப் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட சமூகமாக பட்டியலிடப்பட்டிருக்கும் கதேரி சமூகத்தைச் சேர்ந்தவர். “இது கோடையில் உங்களை குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் வைத்திருக்கும். மேலும் மழையிலிருந்தும் உங்களை பாதுகாக்கும்,” என்று விளக்குகிறார்.
நடைமுறை பயன்பாடுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதில் திருப்தி அடையாமல்: “இது மன்னர்கள் மற்றும் பேரரசர்களால் மதிக்கப்பட்டது. இது பிரதான மதகுருக்களுக்கு இருக்கையாக இருந்தது; மங்களகரமானதாகக் கருதப்பட்ட இந்தப் பாரம்பரியம் இப்போது தோல்வியடைந்துவிட்டது,” என்கிறார்.
பழங்குடி சோட்டாநாக்புரி இனத்தை சேர்ந்த நந்துவின் 650 செம்மறி ஆடுகளும், ஷியோபூர் கிராமத்தில் எங்களைச் சுற்றி மேய்ந்து கொண்டிருந்தன. நந்து, ஐந்து தலைமுறைகளாக ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்த வேலையை அவர் மிகவும் ஆர்வமாக செய்கிறார். "ஒரு நிமிடம் கூட அவற்றை தனியாக விட முடியாது," என்று அவர் ஒரு டாட்டூனை (பற்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மரக்குச்சி) மென்றவாறு கூறுகிறார். "நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், ஆடுகளை நாய்கள் தாக்கிவிடும் அல்லது செம்மறி ஆடுகள், வயல் வெளிகளுக்குள் புகுந்து விடும்."


















