சம்பல் டவுனில் இருக்கும் சராய் டாரின் பகுதி, எலும்பு மற்றும் கொம்பு பொருட்களை கொண்டு செய்யப்படும் பொத்தான்கள், பீர் தம்ளர்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் சமையல் பொருட்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற பகுதி. முகமது இஸ்லாமின் சிறு கடைக்கு தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மிட்டாய்கள் வாங்கும் குழந்தைகளும் மளிகைப் பொருட்கள் வாங்கும் வளர்ந்தவர்களும் அங்கு உண்டு. சில மூத்தவர்கள், இஸ்லாமின் கடைப் பெயர் அறிவிக்கும் சீங் கி காங்கி (எரும்பு கொம்பில் தயாரிக்கப்படும் சீப்புகள்) வாங்க வருவார்கள்.
60 வயது இஸ்லாம், சராய் டாரினில் கொம்பில் சீப்புகள் செய்யும் திறன் பெற்ற கடைசி கைவினைஞர்களில் ஒருவர். பல காலமாக அவருடன் பணியாற்றும் 70 வயது மக்சூத் கான், அப்பொருளை விநியோகிக்கும் கடைசி சிலரில் ஒருவர்.
”இந்த பணி செய்யும் கைவினைஞர்கள் மறைந்தபோது, கலையும் அவரோடு மறைந்து விடுகிறது. அதை மீட்கும் சாத்தியம் இல்லாமல் போனது,” என்னும் இஸ்லாம் ஹூக்காவில் புகை இழுக்கிறார். “சராய் டாரின் முழுக்க நீங்கள் சுற்றலாம். ஆனால் கொம்பில் செய்யப்பட்ட சீப்புகளை வாங்க விரும்பினால், என்னிடம்தான் உங்களை அனுப்பி வைப்பார்கள்.”
2022ம் ஆண்டில் இக்கலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. அறிவுசார் சொத்து பாதுகாப்பு குறியீடான இது, பொருட்கள் தோன்றிய இடத்தை சார்ந்து வழங்கப்படுகிறது. கொம்பு மற்றும் எலும்பு ஆகியவற்றில் செய்யப்படும் கைவினைப் பொருட்கள். சம்பல் பகுதியின் தனித்துவம் என உத்தரப்பிரதேச ஒரு மாவட்டம், ஒரு பொருள் திட்டத்தில் வகைப்படுத்தப்படுகிறது.
“முடி உள்ளவருக்கெல்லாம் சீப்பு தேவைப்புடும்,” என்கிறார் இஸ்லாம் விளையாட்டாக. “ஒரு காலத்தில் மூலைக்கு மூலை, தெருவுக்கு தெருவென எல்லா இடங்களிலும் சீப்புகள் விற்கப்பட்டன.”
கடையாகவும் பட்டறையாகவும் அவருக்கு பயன்படும் இடம் வாடகை இடம் ஆகும். மாத வாடகை ரூ.2,000. தொடர்ச்சியாக அவர் கடை நிர்வாகியாகவும் கைவினைஞராகவும் இயங்குகிறார். அவருக்கு முன்னால் ஆரி (ரம்பங்கள்), ரைத் (உளிகள்), சில்லி (துடைப்பான்), ரெக்மால் (உப்புத்தாள்) மற்றும் அட்டா (மரப் பலகை) போன்ற கருவிகள் இருக்கின்றன.




























