“என் தாய் அவரை ஒருமுறை சந்தித்திருக்கிறார்.”
சாந்திநிகேதனில் ‘அவர்’ என்பது யாரை குறிக்கும் என அனைவருக்கும் தெரியும்.
பயிற்சி பெற்ற பிபின் கர்மாகரின் கைகள், பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ரபீந்திரநாத் தாகூரின் சிறு சிலையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. “சாந்திநிகேதனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரபீந்திரநாத் சிலை அல்லது ஓவியத்தை நிச்சயமாக வாங்குவார்கள். பூரி கோவிலுக்கு சென்றால் நாம் ஜகன்னாத் சிலையை வாங்குவது போல,” என்கிறார் அவர் இந்து கடவுளுடன் 20ம் நூற்றாண்டின் இலக்கிய ஆளுமையை ஒப்பிட்டு. கவிஞரின் பெயரிலுள்ள இரண்டாம் பகுதியின் வங்காள மொழி உச்சரிப்பு, ‘தெய்வீகம்’ என பொருள் படும். அவரின் இலக்கியமும் இசையும் தெய்வீகம்தான்.
ஆசிரமப் பள்ளியையும் பல்கலைக்கழகத்தையும் (விஸ்வ பாரதி) அப்போது கிராமமாக இருந்த இப்பகுதியில் தாகூர் உருவாக்கி நூற்றாண்டுக்கு மேல் கடந்து விட்டது. இப்போது சாந்திநிகேதன் பரபரக்கௌம் டவுனாகவும் மேற்கு வங்க பிர்பும் மாவட்ட சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. கொல்கத்தாவிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் இங்கு வர மூன்று மணி நேரம் ஆகிறது.
நோபல் வென்ற கவிஞர் சாந்திநிகேதனில் கடைகளின் பெயர்களாக சுவர்களின் படங்களாக, சிறு சிலைகளாக, துணிகளாக, திரையரங்குகளாக, நினைவுச் சின்னங்களாக இன்னும் பலவாக நீக்கமற நிறைந்திருக்கிறார். தாகூர் இல்லாத எதையும் நீங்கள் அங்கு பார்த்திட முடியாது.

























