புர்னியா மாவட்டத்தின் சோளம் விளையும் பகுதியில் குறுக்காக செல்லும் பிரதான சாலையின் இரு பக்கங்களும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. சோள அறுவடை முடிந்துவிட்டது. தம் வயல்களுக்கு அருகே இருக்கும் சாலையின் இரு பக்கங்களிலும் விவசாயிகள் சோளக்கருக்களை போட்டு காய வைத்திருக்கின்றனர். சந்த்வா-ருபாஸ்பூர் பழங்குடி வசிப்பிடத்தை நெருங்கும்போது, சந்தால் பெண்களும் ஆண்களும் மர ஏர் போன்ற கருவி கொண்டு தானியங்களை திருப்பி, ஈரத்தை காய வைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. எங்கோ கண்காணிப்பில் இருக்கும் காவலாளி விரைவில் நிலப்பிரபுக்களுக்கான பங்கை வாங்க அவர்களின் வீட்டுக்கு வருவார். அவர்களின் நிலங்களில் பழங்குடிகள் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயிகளாக பணிபுரிந்து வருகின்றனர். நிலச்சீர்திருத்தம் மாநிலத்தில் அமலாகி பல ஆண்டு காலம் ஆனபிறகும், அறுவடையின் ஒரு பங்கை பழங்குடிகள் அவர்களுக்கு கொடுக்கும் நிலையே நீடிக்கிறது.
பிரதான சாலையிலிருந்து தள்ளி, கிராமத்துக்கு அருகே, அவர்களின் முன்னோர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலையின் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் நினைவிடத்திலிருந்து கண்காணித்து கொண்டிருக்கின்றனர். நவம்பர் 22, 1971 அன்று, நிலப்பிரபுக்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 14 பேரின் பெயர்கள், கொண்ட சலவைக்கல் ஒரு வெள்ளைத்தூணில் பதிக்கப்பட்டிருக்கிறது.
“மொத்த கிராமமும் சுடுகாடு போல காட்சியளித்தது. ஓலங்களும் புகையும் ஒவ்வொரு வீட்டிலும் எழுந்து கொண்டிருந்தது. தேற்ற முடியாத நிலையில் மக்கள் இருந்தனர். அவர்கள் (நிலப்பிரபுக்களின் படை) 45 வீடுகளை எரித்து சாம்பலாக்கி இருந்தனர்.” பதின்வயதில் அச்சம்பவத்தை கண்ட நினைவு வயதாகியும் மங்காமல் பசுமையாக சிவநாராயணின் மனதில் இருக்கிறது. இந்த மக்களின் நிலையை காலமும் மாற்றிவிடவில்லை.
அப்போதும், “நிலத்துக்கான சண்டைதான்,” என்கிறார் 70 வயது ஆகும் சிவநாராயண் முர்மு. படுகொலையில் இரு உறவினர்களை பறிகொடுத்தவர் அவர். “சூரியன் மறைந்திருக்கவில்லை.” 2025ம் ஆண்டின் ஜூலை மாத நாளொன்றின் மாலையில் அவரிடம் பேசும்போது, இன்னொரு நினைவுக்குள் அவர் செல்கிறார். “அவர்கள் துப்பாக்கிகள், தடிகள், கோடரிகள் போன்றவற்றுடன் வந்து எங்கள் வசிப்பிடத்தை சுற்றி வளைத்தார்கள். எங்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். அவரை தடுக்க முயன்ற அனைவரையும் எரித்தும் சுட்டும் கொன்றார்கள்,” என்கிறார் அவர்.
ஆனால் சிவநாராயணுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் ஆழமாக இருந்தது. படுகொலைக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு, அவருக்கு 10 வயதாக இருந்தபோது, அவரின் தந்தை லக்கன் லால் ஹெம்ப்ராம் கொல்லப்பட்டார். அப்போதும் நிலம்தான் காரணம். “அவர் கல்வியறிவு பெற்றிருந்தார். சந்தால் பழங்குடிகளின் நில உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் போராடினார். ஒருமுறை அவரை பார்க்க வந்த நிலப்பிரபு தரப்பினரை வீடு சென்று விட்டு வருவதற்காக சென்றவர், திரும்பி வரவே இல்லை. மூன்று நாட்கள் கழித்து அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், காட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.” யாரும் தண்டிக்கப்படவில்லை.
படுகொலைக்கு பத்தாண்டுகள் கழித்து, கீழமை நீதிமன்றம் ஒன்று, 25-லிருந்து 30 நிலப்பிரபுக்களுக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தபோது காலம் மாறிவிட்டதாக சிவநாராயண் நினைத்தார்.
ஆனால் அவருக்கு பாதி கதைதான் தெரிந்திருந்தது.















